மதுரை

ஜல சக்தி அபியான் குழு 2-ஆவது நாளாக மதுரையில் களஆய்வு: மாநகராட்சிப் பள்ளிக்கு பாராட்டு

DIN

மதுரை மாவட்டத்தில் மத்திய நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு இயக்க (ஜலசக்தி அபியான்) ஒருங்கிணைப்புக் குழு இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை களஆய்வு மேற்கொண்டது.
 நிலத்தடி நீரின் வளம் அபாயகரமாக உள்ள பகுதிகளில் ஜலசக்தி அபியான் மூலமாக, நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் இதற்கான ஆய்வுப் பணியை மத்திய நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்புக் குழுவினர் மேற்கொண்டுள்ளனர். 
 ஒருங்கிணைப்பு அலுவலர் விஸ்மிதா தேஜ் தலைமையிலான இக்குழுவினர், மழைநீர் சேமிப்பை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பேரணியைத் தொடக்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் த.சு.ராஜசேகர் தலைமையில் குழு உறுப்பினர்கள், அலுவலர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள் மழைநீர் சேமிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 
அதன் பிறகு மூன்று குழுக்களாக மாவட்டத்தில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு செய்தனர். 
 உசிலம்பட்டி, திருமங்கலம் நகராட்சிப் பகுதிகள், உத்தப்பநாயக்கனூர், வெள்ளலூர், கோட்டநத்தம்பட்டி, கொட்டாம்பட்டி, சேடபட்டி, மதுரை மாநகராட்சிப் பகுதியில் கோச்சடை, ஆரப்பாளையம், மாரியம்மன் தெப்பக்குளம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
 பொதுப்பணித் துறை கண்மாய்களில் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணி, ஊரக வளர்ச்சித் துறையால் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள், மழைநீர் சேமிப்பு அமைப்புகளாக மாற்றப்பட்டுள்ள கைவிடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள், அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேமிப்பு அமைப்புகளைப் பார்வையிட்டனர்.
 மழைநீரைச் சேமித்து மீண்டும் பயன்படுத்தும் வகையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைத்திருந்த ஆரப்பாளையம் பகுதியில் உள்ள வெள்ளிவீதியார் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு மத்தியக் குழுவினர் பாராட்டுத் தெரிவித்தனர்.
 ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.பி. அம்ரித், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஏ.செல்லதுரை மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோர் குழுவினருடன் ஆய்வில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT