மதுரை

ஊழலை ஒழிக்க பாஜக ஆட்சிக்கு வருவது அவசியம்: பியூஷ் கோயல்

DIN


நாட்டில் ஊழலை ஒழிக்க பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது அவசியம் என, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
      பாஜக சார்பில், மதுரை விரகனூர் சுற்றுச் சாலை அருகேயுள்ள ஐடா ஸ்கட்டர் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தல் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
     இந்தியா வலிமையான, பாதுகாப்பான, முன்னேறும் நாடாக இருக்க வேண்டுமானால், தமிழகமும் முன்னேற்றம் அடைய வேண்டும். நாட்டின் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி வரவேண்டும் என்பதே மக்களின் மனநிலையாகும். மக்களவைத் தேர்தலில் பாஜக 300 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 3-இல் 2 பங்கு வெற்றியை பெற்று ஆட்சியமைக்கும். அந்த வெற்றியானது, தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால்தான் முழுமையடையும்.
      தமிழகத்தில் 5 தொகுதிகளில் மட்டும் பாஜக போட்டியிடவில்லை, 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. எனவே, வெற்றிக்கு பாஜக.வினர் ஒற்றுமையுடன் கடுமையாக உழைக்க வேண்டும். தமிழகத்தில் எப்போதும் 40 தொகுதிகளிலும் ஒரே மாதிரியாகத்தான் அலை வீசும். இந்த முறை அந்த அலை பிரதமர் மோடி பக்கம் வீசுகிறது. 
     ஊழல் சக்திகள் நாட்டுக்கும், தேசியத்துக்கும் எதிராகச் செயல்பட்டு, ஊழலற்ற ஆட்சியை அளிக்கும் பிரதமர் மோடியை தோற்கடிக்க நினைக்கின்றன. அதை முறியடிக்க ஒன்றுபடவேண்டும்.
     இதுவரை நாட்டில் பயங்கரவாதத்தை எதிர்த்து, கடந்த கால பிரதமர்கள் நேரடியாக நடவடிக்கை எடுத்தது இல்லை. ஆனால், பாகிஸ்தானில் நமது ராணுவம் நுழைந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த நடவடிக்கையை பிரதமர் நேரடியாக மேற்கொண்டார். மக்கள் தான் மோடி, மோடி தான் மக்கள். மக்கள் நினைப்பதை தான் பிரதமர் மோடி செய்வார். அப்படிப்பட்ட பிரதமர், பயங்கரவாதத்துக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கை மீது சந்தேகம் எழுப்புகின்றனர்.
    இதுவரை கூட்டணிக் கட்சிகளுடன் கருத்து வேறுபாடு இருந்திருக்கலாம், நமது கட்சிக்குள் கூட விமர்சனங்கள், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அவை அனைத்தையும் குழிக்குள் புதைத்துவிட்டு, நமது மெகா கூட்டணியை தமிழகத்தில் வெற்றி பெறச் செய்து மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும் என்றார்.
    கூட்டத்தில், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமை வகித்தார். மூத்த தலைவர் இல. கணேசன், தேசிய செயலர் ஹெச். ராஜா, தேசியக் குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச் செயலர்கள் வானதி சீனிவாசன், முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT