மதுரை

வங்கி ஏடிஎம் மையங்களுக்கு கொண்டு சென்ற ரொக்கம் உள்பட ரூ.35.35 லட்சம் பறிமுதல்

DIN


மதுரையில் சனிக்கிழமை 3 இடங்களில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையின்போது, வங்கி ஏடிஎம் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பணம் உள்ளிட்ட மொத்தம் 35 லட்சத்து 35 ஆயிரத்து 100 ரூபாயை தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
       மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த 2 நாள்களாக மதுரை மாவட்டத்தில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 10 பேரவைத் தொகுதிகளுக்கும் தலா 3 பறக்கும் படை மற்றும் 3 நிலை கண்காணிப்புக் குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
      இதன்படி, மதுரை-திருமங்கலம் சாலையில் பெருங்குடி சோதனைச் சாவடியில், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான நிலை கண்காணிப்புக் குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த வாகனத்தை சோதனையிட்டதில், வங்கி ஏடிஎம் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகக் கூறப்பட்ட ரூ.33 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் இருந்தது. 
     வழக்கமாக,  ஏடிஎம் மையங்களுக்கு பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தைப் போல் அல்லாமல் சாதாரண வாகனமாக இருந்ததால், தேர்தல் அலுவலர்கள் ஆவணங்களைச் சரிபார்த்தனர். ஆவணத்திலிருந்த தொகைக்கும், வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட தொகைக்கும் வேறுபாடு இருந்துள்ளது. மேலும், வாகனத்துக்குரிய ஆவணங்கள் ஓட்டுநரிடம் இல்லை. அதையடுத்து, அத் தொகையை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
     இதேபோல்,  மதுரையை அடுத்த பரவை சோதனைச் சாவடியில், வட்டார வளர்ச்சி அலுவலர் கே. பழனிசாமி தலைமையிலான நிலை கண்காணிப்புக் குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டதில், மதுரையிலிருந்து பழனி சென்ற நபர்களிடம் ரூ.1, 12,500 ரொக்கம் இருந்துள்ளது. அவர்கள், நில விற்பனை தொடர்பாக மேற்படி தொகையுடன் மதுரைக்கு வந்துள்ளனர். உரிய ஆவணங்கள் இல்லாததால், தொகை பறிமுதல் செய்யப்பட்டது.
     தொடர்ந்து, மதுரையை அடுத்த சூர்யா நகரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ.72,600 ரொக்கத்தை மதுரை வடக்கு தொகுதி பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    இந்த 3 இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட 35,35,100 ரூபாயை, மாவட்ட ஆட்சியர் ச. நடராஜன் முன்னிலையில் கருவூலத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT