மதுரை

இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல் ஆணை: ஆசிரியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு

DIN

இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணி நிரவல் மாற்றுப்பணி ஆணையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாக இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலர் அ.சங்கர்  ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தில் அரசுப்பள்ளி,  அரசு உதவி பெறும் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோராக உள்ளனர். தற்சமயம் பணிநிரவல் என்ற பெயரில் இடைநிலை ஆசிரியர்களை மாற்றுப்பணி என்ற முறையில் மாதிரிப் பள்ளிகளுக்கும், அங்கன்வாடிகளுக்கும் கல்வி கற்பிக்குமாறு திண்டுக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆணை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநரிடம் முறையிடப்பட்டுள்ளது. மேலும்  அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கண்காணிப்பாளர்களுக்கான கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வி இணை இயக்குனர்,  அரசு உயர்நிலை,  மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் எவரையும் எவ்வித தொந்தரவும் செய்ய வேண்டாம் என்று வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன் அடிப்படையில் தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல் என்ற அடிப்படையில் ஆணை வழங்கப்படவில்லை.  மேலும் பணிநிரவல் என்பது ஒவ்வொரு பள்ளியிலும் இளையவர் யார் என்று கணக்கிட்டு அவர்களை பணிநிரவல் செய்வதுதான் விதியாக உள்ளது. அவ்வாறு பணியில் இளையவர் என்றாலும் இடைநிலை ஆசிரியர்களை பணி நிரவலில் ஈடுபடுத்தக் கூடாது  என்று பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் வாய்மொழி உத்தரவுக்கிணங்க முழுவதும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் 15 இடைநிலை ஆசிரியர்களை மாதிரி பள்ளிக்கு பணி நிரவல் என்ற முறையில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்  பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அவர்கள் பணிபுரியும் பள்ளியில் இருந்து மாற்றுப் பள்ளிக்கு கிட்டத்தட்ட 150 கிலோ மீட்டர் மற்றும் 100 கிலோ மீட்டர் தொலைவில்  பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. 
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து செப்டம்பர் 19-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது ஓரிரு நாள்களில் பிரச்னையை நிவர்த்தி செய்வதாக தெரிவித்தார். ஆனால் இதுவரை உத்தரவை ரத்து செய்யவில்லை. மேலும் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடைபெற்று வந்த  பதவி உயர்வு கலந்தாய்வும் இரண்டு ஆண்டுகளாக  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,  இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிய பணி நிரவல் மாற்றுப் பணி நியமன ஆணையை ரத்து செய்து மீண்டும் ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளியிலேயே ஆணை வழங்கவேண்டும்.  இந்த கோரிக்கை ஏற்கப்படாத பட்சத்தில் முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT