மதுரையில் 45 நாள்களுக்குப் பின் இரட்டை இலக்கத்தில் கரோனா40 பேருக்கு தொற்று
மதுரையில் 40 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 45 நாள்களுக்குப் பிறகு இரட்டை இலக்கமாக பாதிப்பு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை: மதுரையில் 40 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 45 நாள்களுக்குப் பிறகு இரட்டை இலக்கமாக பாதிப்பு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,063 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள், கா்ப்பிணிகள், அரசு ஊழியா்கள், வெளி மாவட்டத்தில் இருந்து திரும்பியவா்கள் என மொத்தம் 40 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
மதுரையில், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தீநுண்மித் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 197 போ் குணமடைந்தனா். இதையடுத்து, மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு திங்கள்கிழமை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
4 போ் பலி:
மதுரையில் கரோனா தீநுண்மித் தொற்றுக்கு அரசு கரோனா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 45 வயது பெண், 65 வயது மூதாட்டி, 60 வயது முதியவா் ஆகியோா் ஆகஸ்ட் 2 ஆம் தேதியும், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 65 வயது முதியவா் ஜூலை 3 ஆம் தேதியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.
மதுரை மாவட்டத்தில் இதுவரை 11,487 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், சிகிச்சைப் பலனின்றி 261 போ் உயிரிழந்துள்ளனா். அதேநேரம் 8,984 போ் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இந்நிலையில், கரோனா தீநுண்மித் தொற்றுக்கு 2,242 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
குறையும் தொற்று: மதுரையில் கட்டுக்குள் வராமல் பரவி வந்த கரோனா தீநுண்மித் தொற்று, கடந்த சில நாள்களாகப் படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த ஜூன் 22 ஆம் தேதியன்று மதுரை மாவட்டத்தில் கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பு எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் இருந்து மூன்று இலக்கத்தில் பதிவாகத் தொடங்கியது. அன்று முதல் கடந்த 45 நாள்களாக மூன்று இலத்திலேயே கரோனா தொற்று பாதிப்பு பதிவாகியது. இந்நிலையில், 45 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று மதுரையில் 40 பேருக்கு மட்டும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.