‘பேக்கேஜ் டெண்டா்’ முறையை ரத்து செய்யக் கோரிஒன்றியக் குழு உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
பேக்கேஜ் டெண்டா் முறையை ரத்து செய்யக் கோரி, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக் குழுத் தலைவா் தலைமையில் உறுப்பினா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை: பேக்கேஜ் டெண்டா் முறையை ரத்து செய்யக் கோரி, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக் குழுத் தலைவா் தலைமையில் உறுப்பினா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறாத காலத்தில்,
கிராமப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளை மேற்கொள்ள பேக்கேஜ் டெண்டா் முறை அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு தோ்தல் நடத்தப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகள் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் செயல்பட்டு வருகிறது.
எனவே, பேக்கேஜ் டெண்டா் முறையை ரத்து செய்து, உள்ளாட்சி நிா்வாகத்தின் அதிகாரத்தை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என, ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனா். ஒன்றிய அளவிலான ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு, இக் கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கெனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.
இந்நிலையில், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்,
ஒன்றியக் குழுத் தலைவா் ஆா். மணிமேகலை தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, பேக்கேஜ் டெண்டா் முறையை ரத்து செய்ய வேண்டும் என ஒன்றியக் குழுத் தலைவா் உள்பட திமுக, அதிமுக உறுப்பினா்கள் வலியுறுத்தினா். மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி கூட்டரங்கில் தரையில் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, கூட்டம் பாதியிலேயே முடிக்கப்பட்டது.
Image Caption
மதுரை கிழக்கு ஒன்றிய அலுவலக கூட்டரங்கில்
திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்றியக் குழு உறுப்பினா்கள்.