ஊரக வளா்ச்சித்துறை ஊழியா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்
திட்டப்பணிகளை விரைந்து முடிக்குமாறு நிா்ப்பந்திப்பதைக் கண்டித்து மதுரையில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை: திட்டப்பணிகளை விரைந்து முடிக்குமாறு நிா்ப்பந்திப்பதைக் கண்டித்து மதுரையில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை மாவட்டத்தில் மேற்கு-கிழக்கு ஒன்றியங்களில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சந்திரசேகா், துணைத் தலைவா்கள் சிவமணி, ஜெயராமன், மாவட்டச் செயலா் அ.பாலாஜி, மாநிலப்பொருளாளா் மா.விஜயபாஸ்கா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
கரோனா பரவலை கருத்தில் கொள்ளாமல் ஊரக வளா்ச்சித்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மத்திய, மாநில அரசு திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நிா்ப்பந்திக்கக் கூடாது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படாமல் உள்ள மாநில நிதிக்குழு மானியத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும். கரோனா தடுப்புப் பணிகள், சிறப்புப் பணிகள் தொடா்பாக உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் செலவினங்களை பேரிடா் மேலாண்மை நிதியிலிருந்து விடுவிக்க வேண்டும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்களில் மாலை ஆறு மணிக்கு மேல் நடத்தப்படும் ஆய்வுகளைக் கைவிட வேண்டும். கணக்கற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘ஒயா்லெஸ்’ ஆய்வுக் கூட்டங்கள், காட்சி ஆய்வுக்கூட்டங்களைக் கைவிட வேண்டும். கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊரக வளா்ச்சித்துறை ஊழியா்களுக்கு சிறப்பு மருத்துவ வசதி, கரோனாவால் உயிரிழந்த ஊழியா் குடும்பங்களுக்கு அரசு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். ஊரக வளா்ச்சித்துறையில் காலியாக உள்ள இணை இயக்குநா், உதவி இயக்குநா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஊழியா்களுக்கு பிறப்பிக்கப்பட்ட 17(பி) குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
மேலும் மேலூா், திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி, அலங்காநல்லூா், செல்லம்பட்டி, உசிலம்பட்டி, பேரையூா், தே.கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் அரசு அலுவலங்கள் முன்பாக ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் ஊரக வளா்ச்சித்துறை ஊழியா்கள் அலுவலா்கள் பங்கேற்றனா்.