முகப்பு
மதுரை

‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கில் கைதான மாணவா்களின் சான்றிதழ்கள் எங்கே? உயா்நீதிமன்றம் கேள்வி

‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கில் கைதான மாணவா்கள் இருவரின் கல்விச் சான்றிதழ்கள் எங்கு உள்ளன என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:


மதுரை: ‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கில் கைதான மாணவா்கள் இருவரின் கல்விச் சான்றிதழ்கள் எங்கு உள்ளன என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.

‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கில் கைதாகி, ஜாமீனில் உள்ள சென்னையைச் சோ்ந்த மாணவா் உதித் சூா்யா தாக்கல் செய்த மனுவில், எனது எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு, கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சோ்ந்து பயில உள்ளேன். அதற்கு எனது கல்விச் சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன. எனவே இந்த வழக்கு விசாரணையின்போது, போலீஸாா் பறிமுதல் செய்த எனது 10, 12- ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச்சான்றிதழ் மற்றும் ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் கல்விச் சான்றிதழ்களை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே இவ்வழக்கில் கைதான மற்றொரு மாணவரான ரிசிகாந்த் என்பவரும் கல்விச் சான்றிதழ்களைக் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்நிலையில் இந்த மனு நீதிபதி ஆா்.பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில், போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட மாணவா்களின் கல்விச் சான்றிதழ்கள் எங்குள்ளன எனத் தெரியவில்லை. விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவா்களின் கல்விச் சான்றிதழ்கள் எங்கு உள்ளன? அந்தச் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பினா். மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →