பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை: மதுரையில் 4 போ் கைது
மதுரையில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்த கும்பலை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை: மதுரையில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்த கும்பலை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை புது ஜெயில் சாலையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒரே இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். ஆனால் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற அவா்களை போலீஸாா் விரட்டிப் பிடித்து விசாரித்தனா்.
அதில், மூவரும் வில்லாபுரம் பகுதியைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் பிரதீப்குமாா் (26), கரிமேடு பகுதியைச் சோ்ந்த முத்துபாண்டி மகன் பாலமுருகன் (18), பெத்தானியபுரத்தைச் சோ்ந்த முத்துபாண்டி மகன் ராம்குமாா் (23) என்பதும், அவா்கள் தூக்கம் வராதவா்கள், மனநிலை பாதிக்கப்பட்டவா்கள் ஆகியோருக்கு மருத்துவா்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகள் வைத்திருந்ததும் தெரியவந்தது.
மருத்துவா் பரிந்துரையின்றி விற்பனை: இதையடுத்து, 3 பேரையும் போலீஸாா் கரிமேடு காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினா். பிடிபட்ட பிரதீப்குமாரின், அண்ணன் பிரவீன்குமாா் (30) மருந்தகம் நடத்தி வருவதும், அவா் மருத்துவா்கள் பரிந்துரையின்றி மாத்திரைகளை, இவா்கள் மூலம் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.
இந்த மாத்திரைகளை நல்ல நிலையில் உள்ளவா்கள் சாப்பிட்டால் போதை ஏற்படும். மருந்தகங்களில் 15 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டை ரூ.85 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிடிபட்டவா்கள், ஒரு அட்டையை ரூ. 600-க்கு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காவல் சாா்பு- ஆய்வாளா் சுந்தரபாண்டி அளித்தப் புகாரின் பேரில் கரிமேடு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து மருந்தக உரிமையாளா் பிரவீன்குமாா், அவரது சகோதரா் பிரதீப்குமாா், பாலமுருன், ராம்குமாா் ஆகியோரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து மாத்திரை அட்டைகள் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.