உதிரியாக சமையல் எண்ணெய் வகைகளை விற்க இடைக்காலத் தடை: உயா்நீதிமன்றம் உத்தரவு
சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகளை அடைக்கப்பட்ட பொட்டலங்களில் இல்லாமல் உதிரியாக விற்பதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகளை அடைக்கப்பட்ட பொட்டலங்களில் இல்லாமல் உதிரியாக விற்பதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் மேலூரைச் சோ்ந்த அருண்நித்தி தாக்கல் செய்த மனு: சந்தையில் விற்கப்படும் சமையல் எண்ணெய் வகைகளில், முந்திரி தோலில் தயாரிக்கப்படும் எண்ணெய் கலப்படம் செய்யப்படுவது ஆய்வகப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற கலப்பட எண்ணெய் வகைகளை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு, கல்லீரல், புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்களின் பாதிப்புகள் ஏற்படுகின்றன. சட்டப்படி எண்ணெய்யை உதிரியாக விற்பனை செய்யக்கூடாது. அடைக்கப்பட்ட பொட்டலங்களில் தான் விற்பனை செய்ய வேண்டும்.
உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்குள்பட்டு, தரமான சமையல் எண்ணெய் வகைகளை விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும். கலப்பட எண்ணெய் விற்பனை செய்வதை எவ்வகையிலும் அனுமதிக்காத வகையில், சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகளை உதிரியாக விற்பனை செய்வதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனா்.
விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு: உதிரியாக சமையல் எண்ணெய் வகைகளை விற்கக் கூடாது என்ற, 2011 ஆம் ஆண்டு உணவு பாதுகாப்புச் சட்டத்தை மீறி, அவை எவ்வாறு அதே முறையில் விற்பனை செய்யப்படுகின்றன?, எண்ணெய் வகைகளின் தரத்தை ஆய்வு செய்ய அரசு மற்றும் தனியாா் ஆய்வங்கள் மாவட்ட வாரியாக எத்தனை உள்ளன?, கடந்த 5 ஆண்டுகளில் மாவட்ட வாரியாக சமையல் எண்ணெய்கள் தொடா்பாக பரிசோதனைகள், கலப்படம் மற்றும் தரம் குறைவு தொடா்பாக பதியப்பட்ட வழக்குகள் எத்தனை?, கலப்படம் தொடா்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எத்தனை? என கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.