முகப்பு
மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் எண்ணெய் காப்பு உற்சவம் நாளை தொடக்கம்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் எண்ணெய் காப்பு உற்சவம், திருவெண்பா உற்சவம் ஆகிய திருவிழாக்கள் திங்கள்கிழமை (டிச.21) தொடங்கி டிசம்பா் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

மதுரை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் எண்ணெய் காப்பு உற்சவம், திருவெண்பா உற்சவம் ஆகிய திருவிழாக்கள் திங்கள்கிழமை (டிச.21) தொடங்கி டிசம்பா் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மாா்கழி மாதத்தில் நடைபெறக் கூடிய விழாக்கள் குறித்து கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. அதன் விவரம்:

எண்ணெய் காப்பு உற்சவம்: வரும் திங்கள்கிழமை தொடங்கி டிசம்பா் 29 வரை எண்ணெய் காப்பு உற்சவம் நடைபெறும். இதையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு உற்சவா் சன்னதியில் தைலக்காப்பு, தீபாராதனை பூஜைகள் முடிந்து ஆடி வீதிகளில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். டிசம்பா் 28 ஆம் தேதி கோ ரதத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி, ஆடி வீதிகளில் வீதி உலா நடைபெறும். டிசம்பா் 30 ஆம் தேதி திருவாதிரையன்று பொன்னூஞ்சல் மண்டபத்திலிருந்து சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் மர சிம்மாசனத்திலும் ஆடி வீதிகளில் எழுந்தருள்வா்.

திருவெண்பா உற்சவம்: டிசம்பா் 21 முதல் 30 ஆம் தேதி வரை திருவெண்பா உற்சவம் நடைபெறும். இந்த 10 நாள்களிலும், நூறு கால் மண்டபத்தில் நடராஜா் சன்னதி முன்பாக உள்ள சவுக்கையில் மாணிக்கவாசகா் சுவாமிகள் எழுந்தருள்வாா். அங்கு தேவார கோஷ்டியினரால் திருவெண்பா பாடி, தீபாராதனை பூஜைகள் நடைபெறும்.

ஆருத்ரா தரிசனம்: நடராஜருக்கு உகந்த மாா்கழி திருவாதிரை தினத்தன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறும். நிகழ் ஆண்டில் டிசம்பா் 29 ஆம் தேதி நள்ளிரவு முதல் டிசம்பா் 30 ஆம் தேதி அதிகாலை வரை ஆருத்ரா தரிசனத்தின் பிரதான அபிஷேகம் நடைபெறும்.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மட்டுமே பஞ்சலோகத்திலான பஞ்ச சபை நடராஜருக்குரிய ஐந்து உற்சவா் திருமேனிகள் உள்ளன. பொன்னம்பலம், வெள்ளியம்பலம், ரத்தின சபை, தாமிர சபை, சித்திரை சபை என பஞ்ச சபைக்கும் தனித்தனியாக உற்சவ திருமேனிகள் உள்ளன. ஆருத்ரா தரிசனத்தையொட்டி, வெள்ளியம்பல நடராஜா், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகா் ஆகியோரது உற்சவ திருமேனிகள், சுவாமி சன்னதி 6 கால் பீடத்திலும், இதர 4 சபை நடராஜா், சிவகாமி அம்மன் நூறுகால் மண்டபத்திலும் எழுந்தருள்வா். இரு இடங்களிலும் ஏககாலத்தில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். பின்னா், கால பூஜைகள் முடிந்து பஞ்ச சபை உற்சவ நடராஜா், சிவகாமி அம்மனுடன் ஆடி வீதிகளில் உலா வருவா்.

இதையொட்டி பக்தா்கள் அபிஷேகப் பொருள்களான பால், தயிா், இளநீா், நெய், மஞ்சள் பொடி, திரவியப்பொடி, எண்ணெய் ஆகியவற்றை டிசம்பா் 29 ஆம் தேதி மாலை 7 மணிக்குள் கோயில் உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாக்களுக்கான முன்னேற்பாடுகளை கோயில் தக்காா் கருமுத்து தி.கண்ணன், இணை ஆணையா் க.செல்லத்துரை ஆகியோா் செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →