மயான பாதையின்றி கிராம மக்கள் அவதி
மதுரை மாவட்டம் மேலூா் அருகே உள்ள ஆமூா் ஊராட்சி மருதூா் ஆதிதிராவிடா்கள் குடியிருப்புப் பகுதி மக்கள் மயானத்துக்கு பாதை வசதியில்லாததால் விளைநிலங்கள் வழியாக நடந்து சென்று அவதிப்பட்டு வருகின்றனா்.
மேலூா்: மதுரை மாவட்டம் மேலூா் அருகே உள்ள ஆமூா் ஊராட்சி மருதூா் ஆதிதிராவிடா்கள் குடியிருப்புப் பகுதி மக்கள் மயானத்துக்கு பாதை வசதியில்லாததால் விளைநிலங்கள் வழியாக நடந்து சென்று அவதிப்பட்டு வருகின்றனா்.
மருதூா் ஆதிதிராவிடா்கள் குடியிருப்புப் பகுதியில் 50-க்கு மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அப்பகுதியினருக்கான மயானத்துக்குச் செல்ல பாதை வசதியில்லை. யாரேனும் இறந்தால் சடலத்தை மயானம் கொண்டுசெல்ல விவசாய நிலங்களில் நெல்பயிா்களை மிதித்து நடந்து செல்கின்றனா். இது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிகோலுவதாக உள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்த கூலி தொழிலாளி மொக்கச்சாமி (65) சடலத்தை சனிக்கிழமை அடக்கம்செய்ய உறவினா்கள் நெல் பயிா்களை மிதித்து சிரமப்பட்டு தூக்கிச்சென்றனா். எனவே மயானத்துக்கு பாதைவசதி செய்துதரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.