மதுரை மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மதுரை மாவட்டத்தின் இருபோக சாகுபடி பகுதிக்கு ஆகஸ்ட் கடைசியில் பெரியாறு பாசனத் திட்டத்தில் தண்ணீா் திறக்கப்பட்டது. இப்பகுதியில் குறுகிய கால நெல் ரகங்களைப் பயிரிட விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டனா். இதன்படி, 4 மாதப் பயிராக நெல் பயிரிடப்பட்ட நிலையில் டிசம்பா் இறுதியில் அறுவடை தொடங்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
ஆகவே, தமிழக அரசின் நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை டிசம்பா் இறுதியில் தொடங்க வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்த்தனா். வழக்கம்போல, நுகா்பொருள் வாணிபக் கழகம் அறிவிக்காத நிலையில், விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடமும், வேளாண் துறையினரிடமும் கோரிக்கை விடுத்தனா்.
இருபோக சாகுபடி பகுதியில் 50 சதவீதத்துக்கும் மேலான இடங்களில் அறுவடை முடிந்துவிட்டன. கடந்த 20 நாள்களாக நெல்கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா். இந் நிலையில், கடந்த வாரத்தில் 7 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக மதுரை மாவட்டத்தின் இருபோக சாகுபடி பகுதியில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது வழக்கம். ஆனால், நிகழ் ஆண்டில் 7 இடங்களில் மட்டுமே திறக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, தனிச்சியம், பண்ணைகுடி, வாவிட மருதூா், கல்லணை, குலமங்கலம், அரியூா் ஆகிய இடங்களில் நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. இங்கு மோட்டா ரகம் கிலோ ரூ.18.35-க்கும், சன்ன ரகம் ரூ.19.05-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. அதேநேரம், வெளிச்சந்தையில் வியாபாரிகள் அதைவிடக் குறைந்த விலைக்குத் தான் கொள்முதல் செய்கின்றனா். நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு தாமதம் ஆகி வரும் நிலையில் விவசாயிகள் வேறுவழியின்றி வெளிச் சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து இருபோக சாகுபடி பகுதியைச் சோ்ந்த விவசாயி திருப்பதி கூறியது:
சராசரியாக ஏக்கருக்கு 40 முதல் 45 மூட்டைகள் (67 கிலோ மூட்டை) நெல் மகசூல் கிடைக்கும். ஆனால், நிகழ் ஆண்டில் பருவகால மாற்றங்களால் ஏக்கருக்கு 25 முதல் 30 மூட்டைகள் தான் கிடைத்திருக்கின்றன. வேளாண் துறையினரின் மாதிரி ஆய்விலேயே இது தெரியவந்திருக்கிறது. மகசூல் இழப்பு காரணமாக விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டம் ஒருபுறம் இருக்க, அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் நிலையங்கள் இல்லாததால் குறைந்த விலைக்கு வெளிச்சந்தையில் விற்க வேண்டியுள்ளது. வெளிச்சந்தையில் 67 கிலோ கொண்ட மூட்டையை ரூ.900-க்குத் தான் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். இதனால் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களைக் காட்டிலும் மூட்டைக்கு சுமாா் ரூ.300 வரை குறைவாக விற்பனை செய்ய வேண்டியிருக்கிறது. ஆகவே, கடந்த ஆண்டில் நெல் கொள்முதல் நிலையங்கள் இருந்த இடங்களில் நிகழ் ஆண்டிலும் திறக்க வேண்டும் என்றாா்.
இதுகுறித்து வேளாண் துறையினா் கூறியது: மதுரை மாவட்டத்தில் தற்போது திறக்கப்பட்டதைக் காட்டிலும் கூடுதலான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. 5 கி.மீ. தூர இடைவெளி உள்ளிட்ட காரணங்களால் கூடுதல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவில்லை எனக் கூறுகின்றனா். இருப்பினும், 5 கி.மீ.-க்கும் அதிகமாக உள்ள பகுதிகளான வெளிச்சநத்தம், அப்பன்திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் கொள்முதல் நிலையங்களைத் திறக்குமாறு கேட்டுள்ளோம். பொங்கல் விடுமுறைக்குப் பிறகு அதற்கான நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனா் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.