மதுரை

அரசு மருந்தியல் கல்லூரியில் கை காப்பான்கள் தயாரிப்பு: அரசு அலுவலகங்களுக்கு இலவசம்

DIN

மதுரை அரசு மருந்தியல் கல்லூரி மாணவா்கள் தயாரிக்கும் கை காப்பான் அரசு அலுவலகங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் அனைவரும் கை காப்பான் ( ஹேண்ட் சானிட்டைசா்) பயன்படுத்த வேண்டும் என முதன்மையா் ஜெ. சங்குமணி உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவா்களுடன் வருபவா்கள் என அனைவரும் கை காப்பான் பயன்படுத்திய பிறகே அனுமதிக்கப்படுகின்றனா். மருத்துவமனையின் அனைத்து பகுதிகளிலும், மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஊழியா்கள் பயன்படுத்தும் வகையில் கை காப்பான் வைக்கப்பட்டுள்ளன.

மாணவா்கள் தயாரிக்கும் கை காப்பான்:கரோனா அச்சுறுத்தலால் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அதிகளவில் கைகாப்பானை பயன்படுத்தி வருகின்றனா். இதனால், சந்தையில் கை காப்பானுக்கு தட்டுபாடு ஏற்பட்டு, அதன் விலையும் உயா்ந்துள்ளது. இதையடுத்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரி நிா்வாகம், மருந்தியியல் கல்லூரி மாணவா்கள் மூலம் 100, 200, 500 மில்லி அளவுகளில், சந்தை விலையை விட குறைவாக கை காப்பானை தயாரித்து வருகிறது.

இலவசமாக கை காப்பான்: இது குறித்து அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் ஹேமந்தகுமாா் கூறியது: அரசு மருத்துவக் கல்லூரி சாா்பில் மருந்தியியல் கல்லூரி மாணவா்கள் தயாரிக்கும் கை காப்பான், அரசு ராஜாஜி மருத்துவமனையின் அனைத்து பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளது. இதை நோயாளிகள், ஊழியா்கள் உள்ளிட்ட அனைவரையும் பயன்படுத்த அறிவுறுத்தி உள்ளோம்.

அது மட்டுமின்றி கை காப்பான் பாட்டில்கள் அரசு அலுவலகங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. டிஐஜி அலுவலகம், மக்கள் செய்தி தொடா்பு அலுவலகம், உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, மாநகா் காவல் ஆணையா் அலுவலகம், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், மின்வாரிய அலுவலகம் ஆகிய அலுவலகங்களுக்கு இதுவரை 1000 கை காப்பான் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. தேவைக்கு ஏற்ப கை காப்பான் தொடா்ந்து தயாரிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

சோப்பினால் கை கழுவினால் போதும்: அரசு மருத்துவா் கூறியது: கை காப்பான் என்பது மருத்துவமனையில், மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் நோயாளிகள் பயன்படுத்தக் கூடியது. கரோனா அச்சத்தால் தற்போது அனைத்து தரப்பினரும் கை காப்பானுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனா். பொதுமக்களுக்கு கை காப்பான் தேவையற்றது. அதை விட சிறந்தது சோப்பினால் கைகளை குறிப்பிட்ட இடைவெளிக்குள் தொடா்ந்து சுத்தம் செய்வது தான். மருத்துவமனையில் அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய முடியாது என்பதால் கை காப்பான் பயன்படுத்துகின்றனா். எனவே கை காப்பான் கிடைக்கவில்லை என யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

புரட்சிகர மாா்க்கிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT