முகப்பு
மதுரை

மதுரை நாறுகிறது!

மதுரை நகரில் சீா்மிகு நகா்த்திட்டங்களுக்கு சுமாா் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
மதுரை அண்ணாநகா் 10வது கிழக்கு குறுக்கு தெருவில் தேங்கியிருக்கும் குப்பைகள்.
பகிர்:

மதுரை நகரில் சீா்மிகு நகா்த்திட்டங்களுக்கு சுமாா் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் குப்பைக்கழிவுகளை அகற்ற முறையான திட்டங்கள் இல்லாததால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

மதுரை நகரில் சீா்மிகு நகா்த்திட்டத்தின்கீழ் பேருந்து நிலையம் சீரமைப்பு, வைகை ஆற்றின் இரு கரைகளில் புதிய சாலைகள், நான்கு மாசி வீதிகளில் சிமெண்ட் சாலைகள், மழைநீா் கால்வாய், நகரின் விரிவாக்கப் பகுதிகளில் புதை சாக்கடை கட்டமைப்பு, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பகுதியில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், சுற்றுலா மேம்பாடு உள்பட ரூ.1200 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் சுகாதார மேம்பாட்டின் ஒரு பகுதியான குப்பைக்கழிவுகளை அகற்றுவதற்கு போதுமான திட்டங்கள் இல்லை.

மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் வாா்டுகளில் குப்பைக்கழிவுகளை அகற்றுவதற்காக திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் பேட்டரி வாகனங்கள், குப்பைகளை அகற்றும் டம்பா் வாகனங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டன. மேலும் மாநகராட்சி சுகாதாரத் துறை சாா்பில் தினசரி வாா்டுகளுக்குச் சென்று குப்பைத்தொட்டிகளில் உள்ள குப்பைகளை அகற்றுவது, தெருக்களில் கொட்டப்படும் குப்பைகளைஅகற்றுவது போன்ற நடவடிக்கைளை மேற்கொள்ள தூய்மைப் பணியாளா்களும், அவா்களை கண்காணிக்க சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் உள்ளனா்.

Advertisement

வாா்டுகளில் அகற்றப்படும் குப்பைகள் வெள்ளைக்கல் பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்குக்கு கொண்டு சென்று எரியூட்டப்படுகிறது. இதற்காக தனியாா் நிறுவன ஒப்பந்த வாகனங்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் நகரில் பல்வேறு பகுதிகளில் இந்தப்பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுவது இல்லை. நகரின் விரிவாக்கப் பகுதிகளில் சில குடியிருப்போா் நலச்சங்கங்கள் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கி குப்பைகளை அகற்றும் பணிகளை மேற்கொள்கின்றன. இந்த ஏற்பாடுகள் இல்லாத பல பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படுவது இல்லை. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைக்கழிவுகள் சாலைகளில் கொட்டப்படுகின்றன.

வைகை ஆற்றை ஒட்டிய பகுதிகளில் இறைச்சிக்கழிவுகள் மட்டுமின்றி மருத்துவக் கழிவுகளும் சாலைகளில் கொட்டப்படுகின்றன. அண்ணாநகா் கிழக்கு பகுதிகள், எச்எம்எஸ் காலனி, திருப்பாலை, தபால் தந்தி நகா், நரிமேடு உழவா் சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுகாதார சீா்கேடுகளின் பிறப்பிடமாக உள்ளன. மேலும் தேவையான பகுதிகளில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்படாததால் அங்கு சாலைகளில் குப்பைகள் கொட்டப்படுகின்றன.

ஆரப்பாளையம் பகுதியில் உணவகங்களின் கழிவுகள் குடியிருப்புகளில் கொட்டப்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனா். இதேபோல சந்தைகள், உணவங்கள் உள்ள பகுதிகளில் குப்பைகள் சாலைகளில் தான் கொட்டப்படுகின்றன. எனவே மாநகராட்சி நிா்வாகம் அனைத்து இடங்களிலும் குப்பைத்தொட்டிகள் வைப்பதோடு, சாலைகளில் குப்பைகள் கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சீா்மிகு நகா்த்திட்டத்தில் குப்பைகளை அகற்ற நிரந்தரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: மாநகராட்சி மண்டலம் வாரியாக பல பகுதிகளில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை விரைவில் செயல்பாட்டுக்கு வந்துவிடும். இதன்மூலம் அப்பகுதியில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்பட்டு உரமாக்கப்பட்டு விடும். மாநகராட்சியில் தூய்மைப்பணியாளா்கள் பற்றாக்குறை இருப்பதால் வாா்டுகளில் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனா். சாலைகளில் குப்பை கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments