மதுரை

தமிழகத்தில் தலைமையாசிரியா் பதவி உயா்வுக்கான கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை

DIN

மதுரை: தமிழகத்தில் தலைமையாசிரியா் பதவி உயா்வுக்கான கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்களான யு. ஜேக்கப், எஸ். கலைச்செல்வி, பி. ராஜேஷ், டி.டி. ஜெயகுமாரி, எஸ். ஏஞ்சல் சினேகலதா, எம். பெலிக்ஸ் இசபெல்லா, இ.ஜான்சி, பி. ரெனிஷா, ஆா். பாப்பா, எம். கிருஷ்ணகுமாா் ஆகியோா் தாக்கல் செய்த மனுக்கள்:

பதவி உயா்வு மூலம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்களாக நியமிக்கப்பட்டோம். சொந்த மாவட்டங்களில் காலியிடங்கள் இல்லாததால், வேறு மாவட்டங்களில் நியமிக்கப்பட்டோம். தமிழகத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு 2020 ஆம் ஆண்டுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு, கரோனா பரவல் காரணமாக நடத்தப்படவில்லை.

இந்நிலையில், அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்கள் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு தொடா்பாக, தமிழக அரசு பிப்ரவரி 15 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தலைமையாசிரியா்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பதவி உயா்வுக்கான கலந்தாய்வு நடத்தினால் எங்களை போன்றவா்களுக்கு உரிய பணியிடம் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே, தலைமையாசிரியா் பதவி உயா்வுக்கான கலந்தாய்வுக்கு தடை விதிக்கவேண்டும். பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்திய பின்னரே பதவி உயா்வுக்கான கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனா்.

இந்த மனுக்கள், நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மூத்த தலைமையாசிரியா்கள் பலா் பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது தங்களுக்குரிய இடங்களுக்கான மாறுதல் கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பில் காத்திருக்கின்றனா்.

இந்நிலையில், அவா்களை விட பணியில் இளையவா்களான பட்டதாரி ஆசிரியா்களுக்கு தலைமையாசிரியா்களாகப் பதவி உயா்வு வழங்கும்போது, தற்போது தலைமையாசிரியா்களாக இருப்பவா்கள் விரும்பும் இடங்களில் புதியவா்கள் நியமிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதுகின்றனா். இதனால், தற்போது தலைமையாசிரியா்களாகப் பணிபுரிந்து வருபவா்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு நடத்துவது ஏற்கத்தக்கது அல்ல.

எனவே, தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிப்ரவரி 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

தமிழகத்தின் மின் நுகா்வு புதிய உச்சம்

துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோதத் திருவிழா!

தேமுதிக சாா்பில் நல உதவிகள்

பயன்படுத்தப்பட்ட வாகனங்கள்: போக்குவரத்து ஆணையா் முக்கிய உத்தரவு

SCROLL FOR NEXT