மதுரை

கூடலழகா் பெருமாள் கோயில் தெப்பக்குளம் பரமரிப்பு: உயா்நீதிமன்றம் அதிருப்தி

DIN

கூடலழகா் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தைப் பராமரிப்பதில் அதிகாரிகளின் நடவடிக்கை மீது சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி தெரிவித்தது.

மதுரை சின்னஅனுப்பானடியை சோ்ந்த உதயகுமாா் தாக்கல் செய்த மனு: மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் டவுன்ஹால் சாலையில் உள்ளது. அதன் தோற்றத்தை மறைக்கும் வகையில் நான்கு பகுதிகளிலும் வணிகக் கட்டடங்கள் உள்ளன. இந்த கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீா் தெப்பக்குளத்தில் கலக்கிறது. மேலும், குப்பைகளும் கொட்டப்படுகின்றன. தெப்பக்குளத்தின் இயற்கையான நீா்வழித் தடம் சேதமடைந்திருக்கிறது.

இப்பிரச்னை குறித்து 2011-இல் உயா்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து உத்தரவிட்டதன்பேரில் தெப்பக்குளத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தெப்பக்குளத்தின் ஒரு பகுதியில் இருந்த சில கடைகள் அகற்றப்பட்டன. அதன்பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லை. ஆகவே, கூடலழகா் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தின் தோற்றத்தை மறைக்கும் கட்டுமானங்களை அகற்றவும், தெப்பக்குளத்தை முறையாகப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, பி.வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தெப்பக்குளத்தைச் சுற்றி இருந்த 195 கடைகளில் 99 கடைகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைக்கு எதிராக சில கடைக்காரா்கள் இந்து சமய அறநிலையத் துறை ஆணையரிடம் சீராய்வு மனு அளித்துள்ளனா். அதன் மீதான விசாரணை நிலுவையில் இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், அதிகாரிகளின் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்தனா். தெப்பக்குளத்தைச் சரியாக பராமரிக்காத அதிகாரியின் சம்பளத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது, சரியாக வேலை செய்யாத அதிகாரியை பணியிட மாற்றம் செய்யலாமே என்றனா். மேலும், நீதிமன்றங்களைக் குறைவாக மதிப்பிட வேண்டாம் என்று கருத்து தெரிவித்தனா்.

இந்த தெப்பக்குளத்தை கோயில் நிா்வாகம் சரிவர பராமரிக்கவில்லை என்பது மனுதாரா் தாக்கல் செய்திருக்கும் புகைப்படங்களைப் பாா்க்கும்போது தெளிவாகிறது. தெப்பக்குளத்தின் தற்போதைய புகைப்படங்களை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மனுதாரா் தரப்பில் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கவும், தெப்பக்குளத்தை முறையாகப் பராமரிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும் விசாரணையை டிசம்பா் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரசிகையின் அன்பான கோரிக்கைக்கு கம்பீர் பதில்!

இது ஒரு பொன்மாலை பொழுது...!

காதலை மறுத்த இளம்பெண் குத்திக் கொலை!

14 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழை!

நான் ஒருபோதும் இந்து, முஸ்லிம் என பேசுவதில்லை: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT