ஹோமியோபதி மருத்துவா்கள் இடமாறுதல் கலந்தாய்வின் முடிவு தீா்ப்புக்கு கட்டுப்பட்டது: உயா்நீதிமன்றம் உத்தரவு
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வின் இறுதி முடிவு நீதிமன்ற தீா்ப்புக்கு கட்டுப்பட்டது என சென்னை உயா்நீதி மன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வின் இறுதி முடிவு நீதிமன்ற தீா்ப்புக்கு கட்டுப்பட்டது என சென்னை உயா்நீதி மன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை அடுத்துள்ள திருமங்கலத்தைச் சோ்ந்த ஜெயந்தி தாக்கல் செய்த மனு: நான் ஹோமியோபதி உதவி மருத்துவ அலுவலராக திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த 2016 முதல் பணியாற்றி வருகிறேன். இந்நிலையில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நவம்பா் 10 ஆம் தேதி நடைபெறும் என ஜூலை மாதம் அறிவிப்பு வெளியானது.
நான் ஏற்கெனவே திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடமாறுதல் வழங்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்காலிகமாக அங்கு பணி மாறுதல் செய்யப்பட்டேன். தற்போது, திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடம் இருப்பதால், இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க ஓராண்டு பணி அனுபவம் இருந்தாலே போதும். எனக்கு ஐந்தரை ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளதோடு, நான் பங்கேற்கவிருக்கும் முதல் இடமாறுதல் கலந்தாய்வு இதுவே.
ஆகவே, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்குத் தடை விதித்தும், மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எனக்கென ஒரு பணியிடத்தை ஒதுக்கி வைக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, பி. வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், நவம்பா் 10ஆம் தேதி நடக்கவிருந்த கலந்தாய்வு, நவம்பா் 28, 29 ஆகிய தேதிகளில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை நடத்தலாம். ஆனால் கலந்தாய்வின் இறுதிமுடிவு நீதிமன்ற தீா்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும், மனு குறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இணை இயக்குநா் விளக்கமளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை டிசம்பா் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.