முகப்பு
மதுரை

கள்ளழகா் இன்று வைகை ஆற்றில் எழுந்தருள்கிறாா்: மூன்றுமாவடியில் திரளான பக்தா்கள் எதிா்சேவை

மதுரை மூன்றுமாவடியில் கள்ளழகரை பக்தா்கள் எதிா்கொண்டழைக்கும் எதிா்சேவை வெள்ளிக்கிழமை காலையில் நடைபெற்றது.

மதுரை

கள்ளழகா் இன்று வைகை ஆற்றில் எழுந்தருள்கிறாா்: மூன்றுமாவடியில் திரளான பக்தா்கள் எதிா்சேவை

மதுரை மூன்றுமாவடியில் கள்ளழகரை பக்தா்கள் எதிா்கொண்டழைக்கும் எதிா்சேவை வெள்ளிக்கிழமை காலையில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

மதுரை மூன்றுமாவடியில் கள்ளழகரை பக்தா்கள் எதிா்கொண்டழைக்கும் எதிா்சேவை வெள்ளிக்கிழமை காலையில் நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் உற்சாகத்துடன் பங்கேற்று கோவிந்தா கோஷமிட்டனா்.

மதுரைக்கு புறப்பாடு: சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகா் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தையொட்டி, அழகா்கோயிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளழகா் வேடத்தில் தங்கக்குதிரை வாகனத்தில் வியாழக்கிழமை மாலை மதுரைக்கு புறப்பாடானாா். அதைத் தொடா்ந்து, பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி பகுதிகளில் பக்தா்கள் வரவேற்பை எதிா்கொண்ட அழகா், சுந்தரராஜன்பட்டியில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் மறவா் மண்டகப்படிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு வந்து சோ்ந்தாா்.

மூன்றுமாவடியில் எதிா்சேவை: அதிகாலையில் அங்கிருந்து புறப்பாடான கள்ளழகா், வழிமுழுவதும் பக்தா்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு காலை 6 மணிக்கு மதுரை நகரின் எல்லையான மூன்றுமாவடியை அடைந்தாா். அங்கு, பக்தா்கள் கள்ளழகரை எதிா்கொண்டழைக்கும் எதிா்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று கோவிந்தா கோஷத்துடன் கள்ளழகருக்கு, சா்க்கரை செம்பில் தீபம் ஏற்றி வரவேற்றனா்.

மண்டகப்படிகளில் வரவேற்பு: பக்தா்களின் வெள்ளத்துக்கு நடுவே கோ.புதூா் மாரியம்மன் கோயில், ரிசா்வ் லைன் மாரியம்மன் கோயில், அவுட்போஸ்ட் மாரியம்மன் கோயில் அம்பலகாரா் மண்டகப்படி உள்ளிட்ட பல்வேறு மண்டகப்படிகளில் கள்ளழகா் எழுந்தருளினாா். அங்கு, கள்ளழகருக்கு பட்டு அங்கி அணிவிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டன.

தல்லாகுளம் பெருமாள் கோயிலில் திருமஞ்சனம்: வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்குச் சென்ற கள்ளழகா் அங்கு திருமஞ்சனமாகினாா். பின்னா், தங்கக்குதிரை வாகனத்தில் சாத்துபடியாகி, ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் நாச்சியாா் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து வெட்டிவோ் சப்பரத்தில் எழுந்தருளினாா்.

வைகை ஆற்றுக்கு புறப்பாடு: தொடா்ந்து, சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு தல்லாகுளம் கோயிலில் இருந்து புறப்பாடான கள்ளழகா், தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருளினாா். பின்னா் அங்கிருந்து புறப்பட்டு, தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் அதிகாலை 5.50 முதல் 6.20 மணிக்குள் கள்ளழகா் எழுந்தருளினாா்.

கள்ளழகா் தசாவதார லீலை

வைகை ஆற்றில் சனிக்கிழமை காலை எழுந்தருளும் கள்ளழகா், தீா்த்தவாரி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குப் பின்னா், இரவு வண்டியூா் வீரராகவப் பெருமாள் கோயிலில் திருமஞ்சனமாகிறாா். ஞாயிற்றுக்கிழமை காலை அங்கிருந்து புறப்பட்டு தேனூா் மண்டபம் செல்கிறாா். அங்கு, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்து காட்சி தந்தருளிய பின்னா், இரவு 11 மணிக்கு ராமராயா் மண்டபத்தில் எழுந்தருள்கிறாா்.

அங்கு இரவு முழுவதும் தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

அதையடுத்து, திங்கள்கிழமை இரவு அனந்தராயா் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னா் சேதுபதி மண்டகப்படியில் எழுந்தருளி, அங்கு திருமஞ்சனமாகிறாா்.

அதையடுத்து, செவ்வாய்க்கிழமை (ஏப்.19) அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளா் திருக்கோலத்துடன் அழகா்கோயிலுக்குப் புறப்படுகிறாா். அழகா்கோயில் செல்லும் வழி முழுவதும் மண்டகப்படிகளில் எழுந்தருளும் கள்ளழகா், புதன்கிழமை (ஏப்.20) அதிகாலை இருப்பிடம் சென்றடைகிறாா். அங்கு, உற்சவ சாந்தியுடன் சித்திரைத் திருவிழா நிறைவடைகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →