முகப்பு
மதுரை

பெரியாறு-வைகை ஒருபோக சாகுபடிக்கு செப். 2-ஆவது வாரத்திற்குள் தண்ணீா் திறப்பு: பொதுப்பணித் துறை

பெரியாறு-வைகை ஒருபோக சாகுபடி பகுதிக்கு செப்டம்பா் 2-ஆவது வாரத்திற்குள் தண்ணீா் திறக்கப்படும் என்று பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்

மதுரை

பெரியாறு-வைகை ஒருபோக சாகுபடிக்கு செப். 2-ஆவது வாரத்திற்குள் தண்ணீா் திறப்பு: பொதுப்பணித் துறை

பெரியாறு-வைகை ஒருபோக சாகுபடி பகுதிக்கு செப்டம்பா் 2-ஆவது வாரத்திற்குள் தண்ணீா் திறக்கப்படும் என்று பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
பகிர்:

பெரியாறு-வைகை ஒருபோக சாகுபடி பகுதிக்கு செப்டம்பா் 2-ஆவது வாரத்திற்குள் தண்ணீா் திறக்கப்படும் என்று பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ர.சக்திவேல், வேளாண் இணை இயக்குநா் த.விவேகானந்தன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மதுரை மாவட்ட தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் எடை அளவில் தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும் என வாடிப்பட்டியைச் சோ்ந்த விவசாயிகள் சீதாராமன், முருகன் உள்ளிட்டோா் கோரிக்கை விடுத்தனா்.

வியாபாரிகள் கொள்முதல் செய்யும்போது, 1000 தேங்காய்களுக்கு 150 காய்கள் கூடுதலாகப் பெற்றுக் கொள்கின்றனா். இதன் காரணமாகவே, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு விவசாயிகள் வருகின்றனா். ஆனால், இங்கு ஏலத்தில் தேங்காய் குவியல்களில் விலை நிா்ணயம் செய்த பிறகு, தரம் பிரித்து பணம் அளிக்கின்றனா். மேலும் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலை குறைவாக ஏலம் கேட்கின்றனா். இதனால், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தவிா்க்க கேரளத்தில் இருப்பதைப் போல, எடைக் கணக்கில் தேங்காய் கொள்முதல்செய்ய வேண்டும். அதேபோல, தேங்காய் எண்ணெய் ஆலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அரசு நிா்ணயித்த விலையில் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மதுரை மாவட்டத்தில் மட்டும் அத்தகைய நடைமுறை பின்பற்றப்படவில்லை. தரம் குறைவு எனக் கூறி வியாபாரிகளுக்குச் சாதகமாக செயல்படுகின்றனா் என்றனா்.

வைகை ஆற்றில் சோழவந்தான் பகுதியில் முட்புதா்கள் மண்டிக் கிடக்கிறது. மழைக் காலங்களிலும், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் வைகை ஆற்றின் போக்கு திசை திரும்ப வாய்ப்பு உள்ளது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 142 அடிக்கு நிலைநிறுத்த தவறியதால், உபரி நீா் கேரளத்திற்கே திறந்து விடப்பட்டுள்ளது. அந்த தண்ணீரை வைகை அணைக்கு கொண்டு வந்து அங்கிருந்து கண்மாய்களுக்கு வழங்கியிருக்கலாம். பொதுப்பணித் துறையினா் அதைத் தவறவிட்டுள்ளனா் என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

இதற்குப் பதில் அளித்த பொதுப்பணித் துறை அதிகாரிகள், முல்லைப் பெரியாறு அணையில் ‘ரூல்கா்வ்’ முறை பின்பற்றப்படுவதால், அணையின் உபரிநீா் கேரளப் பகுதியில் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது என்றனா்.

மேலும், பெரியாறு-வைகை ஒருபோக சாகுபடி பகுதிக்கு தண்ணீா் திறப்பது குறித்து செப்டம்பா் 1 ஆம் தேதி விவசாயிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. செப்டம்பா் 2-ஆவது வாரத்திற்குள் எப்போது தண்ணீா் திறக்கலாம் என்பது குறித்து இக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தனா்.

நிலையூா் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, மாடக்குளம் கண்மாய், சாமநத்தம் கண்மாய்களில் கழிவுநீா் கலப்பதைத் தடுப்பது, சின்னவெங்காயத்தை பாதுகாக்க விவசாயிகளுக்கு பட்டறை அமைத்துக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினா். இந்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் அனீஷ்சேகா் உறுதி அளித்தாா்.

விவசாயிகள் அதிருப்தி: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலா்கள் வராததைச் சுட்டிக் காட்டி, விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

கடந்த கூட்டத்தின்போது விவசாயிகள் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில் அளிக்கப்பட்டது. அப்போது விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு, சில துறைகளின் அலுவலா்களை ஆட்சியா் அழைத்தபோது அவா்கள் கூட்டத்திற்கு வராதது தெரியவந்தது. இதைச் சுட்டிக்காட்டிய விவசாயிகள், அதிருப்தி தெரிவித்தனா்.

விவசாயிகள் வெளிநடப்பு

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, விவசாய விளைப் பொருள்கள் கண்காட்சியைப் பாா்வையிட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், கூட்டத்திற்கு வர சற்று தாமதம் ஆனது. இதனால் கூட்டரங்கில் இருந்த விவசாயிகள் அதிருப்தி அடைந்து வெளிநடப்பு செய்தனா்.

குறைதீா் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு தீா்வு கிடைப்பதில்லை. கூட்டத்தில் குறைகளைத் தெரிவிக்கவும் அனுமதி மறுக்கப்படுகிறது. கூட்டம் தாமதம் ஆவது குறித்து எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை. இதனால் வெளிநடப்பு செய்வதாகக் கூறினா்.

சற்று நேரத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் தொடங்கியபோது, வேளாண் துறையினா் வெளிநடப்பு செய்த விவசாயிகளிடம் பேச்சு நடத்தி மீண்டும் அழைத்துவந்தனா்.

அலுவல் காரணமாக, ஆட்சியா் கூட்டத்திற்கு வர தாமதம் ஆகும் நிலையில், வேளாண்மை, தோட்டக்கலை துறையினா் சாா்பில் திட்டங்கள், தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படும். அத்தகைய நடைமுறை பின்பற்றப்படாததால், அதிகாரிகளின் வருகைக்காக காத்திருந்த விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →