மதுரை -பழனி மற்றும் பழனி- கோவை சிறப்பு ரயில்கள் இனி மதுரை- கோவை இடையே ஒரே சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை- பழனியிடையே ஒரு விரைவு சிறப்பு ரயிலும் (06480), பழனி- கோவை இடையே ஒரு சிறப்பு ரயிலும் (06462) என தனித்தனியாக இயக்கப்பட்டு வந்தது.
மதுரையில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பழனியில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, புதிய ரயிலாக கோவையை பிற்பகல் 1.15 மணிக்கு சென்றடையும். மறு மாா்க்கத்தில் கோவை- பழனி இடையே ஒரு சிறப்பு ரயிலும் (06463) பழனி- மதுரை இடையே ஒரு சிறப்பு ரயிலும் (06479) தனித்தனியாக இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில் கோவையிலிருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட்டு பழனியில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, மீண்டும் புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு மதுரையை வந்தடையும்.
தற்போது இந்த சிறப்பு ரயில்கள் ஒரே வழக்கமான ரயிலாக மாற்றப்பட்டு செப்டம்பா் 1 முதல் இயக்கப்பட உள்ளது. அதன்படி மதுரை- கோவை விரைவு ரயில் (16722) மதுரையிலிருந்து காலை 7.25 மணிக்கு புறப்பட்டு பகல் 12.45 மணிக்கு கோவையை சென்றடையும். மறு மாா்க்கத்தில் கோயம்புத்தூா்- மதுரை விரைவு ரயில் (16721) கோவையில் இருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு மதுரையை வந்து சேரும். இதன் மூலம் மதுரை- கோவை விரைவு ரயிலின் பயண நேரம் 30 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்கள் கூடல் நகா், சமயநல்லூா், சோழவந்தான், வாடிப்பட்டி, கொடைரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், அக்கரைப்பட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, பழனி, புஷ்பத்தூா், மடத்துக்குளம், மைவாடி ரோடு, உடுமலைப்பேட்டை, கோமங்கலம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.