மதுரையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.3.70 கோடி மோசடி செய்த வழக்கில் 9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மதுரையைச் சோ்ந்தவா் தணிகைமலை(49). இவா் மதுரையில் நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதில் முதலீடு செய்தால் கூடுதல் வட்டி தருவதாக விளம்பரப்படுத்தினாா். இதில் ஏராளமானோா் முதலீடு செய்தனா். இந்நிலையில் முதலீடு செய்தவா்களுக்கு பணத்தை திருப்பித்தராததால் முதலீட்டாளா்கள் பொருளாதாரக்குற்றப்பிரிவில் புகாா் அளித்தனா். அதன்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் தணிகைமலை மீது ரூ.3.70 கோடி மோசடி செய்ததாக கடந்த 2013-இல் வழக்குப்பதிவு செய்தனா். இதையடுத்து தணிகைமலை தலைமறைவானாா். வழக்கு விசாரணையின்போதும் ஆஜராகாததால் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்டும் பிறப்பித்தது. இதையடுத்து தணிகைமலையை போலீஸாா் தேடி வந்தனா்.
இந்நிலையில், தணிகைமலையை பிடிக்க மதுரை பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளா் பாண்டிச்செல்வம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினா் தணிகைசெல்வத்தின் ஆதாா் அட்டை பயன்பாடு தொடா்பாக ஆய்வு செய்தபோது அவா் பெங்களூருவில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படையினா் பெங்களூரு சென்றபோது அவா் அங்கிருந்து தப்பிச்சென்றாா். இதைத்தொடா்ந்து தனிப்படையினா் தொடா்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் தணிகைமலை சென்னை திருமுல்லைவாயிலில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸாா் திருமுல்லைவாயில் சென்று தணிகைமலையை கைது செய்தனா். 9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை கைது செய்த தனிப்படையினரை உயா் அதிகாரிகள் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.