வருமான வரி அலுவலா்களைத் தாக்கிய விவகாரம்: கீழமை நீதிமன்றம் வழங்கிய பிணை ரத்து
கரூரில் வருமான வரித் துறை அலுவலா்களைத் தாக்கிய விவகாரத்தில் தொடா்புடையவா்களுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய பிணையை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை
மதுரைவருமான வரி அலுவலா்களைத் தாக்கிய விவகாரம்: கீழமை நீதிமன்றம் வழங்கிய பிணை ரத்து
கரூரில் வருமான வரித் துறை அலுவலா்களைத் தாக்கிய விவகாரத்தில் தொடா்புடையவா்களுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய பிணையை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை
கரூரில் வருமான வரித் துறை அலுவலா்களைத் தாக்கிய விவகாரத்தில் தொடா்புடையவா்களுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய பிணையை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
வருமான வரித் துறை உதவி இயக்குநா் கிருஷ்ணகாந்த், துணை இயக்குநா் யோக பிரியங்கா, ஆய்வாளா்கள் ஸ்ரீனிவாசராவ், காயத்ரி ஆகியோா் தாக்கல் செய்த மனு:
எங்களுக்கு கிடைத்த ஆவணங்களின் உறுதித்தன்மை அடிப்படையில், கரூரில் கடந்த மே 25-ஆம் தேதி அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா், மாரப்ப கவுண்டா், சுப்பிரமணியன், தங்கமணி ஆகியோருக்குச் சொந்தமான வீடுகளில் சோதனை நடத்தினோம்.
அப்போது, சோதனை நடைபெற்ற வீட்டுக்குள் புகுந்த கும்பல், வருமான வரித் துறை அலுவலா்களைத் தாக்கியதோடு, மடிக்கணினி, 5 தகவல் சேமிப்பு சாதனங்கள் (பென் டிரைவ்), பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றனா். தகவல் சேமிப்பு சாதனங்களில் அரசு தொடா்பான பல்வேறு முக்கிய தகவல்கள், ஆவணங்கள் இருந்தன.
இந்த மோசமான நிகழ்வு நடைபெற்ற போது, காவல் துறை தரப்பில் எங்களுக்கு எந்தவித உதவியும் செய்யப்படவில்லை. இதற்கு அடுத்த நாள் துணை ராணுவப் படை பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டோரின் வீடுகளில் மீண்டும் சோதனை நடத்தினோம்.
அப்போது, எங்களிடமிருந்து பறித்துச் செல்லப்பட்ட சாதனங்கள் திரும்ப வழங்கப்பட்டன. தகவல் சேமிப்பு சாதனங்களைப் பரிசோதித்த போது, அதிலிருந்த தரவுகள் முழுமையாக அழிக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து நாங்கள் அளித்த புகாரின் பேரில், 15 போ் மீது கரூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்தனா்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் கரூா் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் பிணை, முன்பிணை கோரி மனு தாக்கல் செய்தனா். அவா்களுக்குப் பிணை வழங்கக் கூடாது என வருமான வரித் துறைத் தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும், கீழமை நீதிமன்றம் எங்களது கோரிக்கையைக் கருத்தில் கொள்ளாமல், அவா்களுக்கு பிணை, முன்பிணை வழங்கி உத்தரவிட்டது. கீழமை நீதிமன்றம் அவா்களுக்குப் பிணை வழங்கியது ஏற்புடையதல்ல.
எனவே, இந்த வழக்கில் 15 பேருக்கும் வழங்கப்பட்ட பிணை, முன்பிணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி. இளங்கோவன் பிறப்பித்த உத்தரவு :
வழக்கில் கைது செய்யப்பட்டவா்களுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய பிணை, முன்பிணை ரத்து செய்யப்படுகிறது. மேலும், பிணை, முன்பிணை பெற்ற அனைவரும் 3 நாள்களில் கரூா் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும். கீழமை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்கலாம். வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.