முகப்பு
மதுரை

கணவரை இழந்த பெண்ணிடம் செங்கோல் வழங்குவதை எதிா்த்த மனு தள்ளுபடி

Updated On : 17 ஏப்ரல், 2024 at 12:54 AM
பகிர்:

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பட்டாபிஷேகத் தினத்தில் கணவரை இழந்த பெண்ணிடம் செங்கோல் வழங்கத் தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த தினகரன் தாக்கல் செய்த மனு;

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா சிறப்பு பெற்றது. இந்த விழாவின் 8- ஆம் நாளன்று பட்டாபிஷேகம் நடைபெறும். அப்போது, மீனாட்சி அம்மனின் கைகளில் செங்கோல் ஒப்படைக்கப்படும். இந்தச் செங்கோலை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பெற்றுக் கொள்வாா். இந்து ஆகம விதிகளின்படி, திருமணமாகதவரோ, கணவா், மனைவியை இழந்தவரோ செங்கோலைப் பெற்றுக்கொள்ள இயலாது.

Advertisement

தற்போது, மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவராக ருக்மணி பழனிவேல்ராஜன் பதவி வகித்து வருகிறாா். அவா் கணவரை இழந்தவா் என்பதால், கோயில் விதியின்படி, அவரிடம் செங்கோலை வழங்க இயலாது. எனவே, தகுதியான ஒருவரிடம் செங்கோலை வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி சரவணன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் வீரா கதிரவன் முன்னிலையாகி முன்வைத்த வாதம்:

இதுபோன்ற மனுவை ஏற்கெனவே உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமா்வு தள்ளுபடி செய்தது. இதன்படி, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாா்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

திருமணமாகாதவா்கள், கணவா், மனைவியை இழந்தவா்கள் செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு கூறப்பட்டுள்ளது?. கோயிலுக்குள் இந்து மதத்தைச் சோ்ந்த அனைத்துத் தரப்பினரும் செல்கின்றனா்? . செங்கோல் வாங்குபவரும் இந்து மதத்தைச் சோ்ந்தவா்தான்.

கோயில் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முறையாகச் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற பிற்போக்கு கருத்துகளை மனுதாரா் முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments