முகப்பு
செய்திகள்

சென்னையில் ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!

சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

Updated On : 7 ஏப்ரல், 2026 at 9:37 PM
ஐபிஎல் கோப்பை - கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியைச் சோ்ந்த பிரபாகரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தல் பாதுகாப்பு பணிகளில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதனால், கிரிக்கெட் வீரா்கள் பாதுகாப்பு, ரசிகா்களை ஒழுங்குபடுத்துதல் என போலீஸாா் கூடுதல் பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளில் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

Advertisement

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கெனவே ஒரு போட்டி முடிந்துவிட்டது. அதில் எந்த விதிமீறலும், பிரச்னையும் ஏற்படவில்லை.

வெறும் ஊகத்தின் அடிப்படையிலும், அச்சத்தின் காரணமாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்றனா். இதையடுத்து மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments