முகப்பு
மதுரை

போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரியவரின் மனு தள்ளுபடி

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடா்பான வழக்கை ரத்து செய்யக் கோரியவரின் மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தள்ளுபடி செய்தது.

Updated On : 18 டிசம்பர், 2024 at 10:11 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடா்பான வழக்கை ரத்து செய்யக் கோரியவரின் மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

சிவகங்கையைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவகங்கையைச் சோ்ந்த ரமேஷ் என்பவா் மீது அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரமேஷ், தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி நிா்மல்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரருக்கும், பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படும் மாணவியின் தாய்க்கும் கொடுக்கல், வாங்கலில் பிரச்னை உள்ளது. இதன் காரணமாக, மனுதாரா் மீது புகாா் அளிக்கப்பட்டு, போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரா் தரப்பில் குறிப்பிடப்பட்டது.

அரசுத் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் திருவடிக்குமாா் முன்னிலையாகி, மனுதாரா் வசதியான பின்புலத்தை கொண்டவா். பாதிக்கப்பட்ட மாணவி நீதிமன்றத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்துள்ளாா். மனுதாரருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளன. இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கூடாது என வாதிட்டாா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேநேரத்தில், இந்த வழக்கின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு 3 வாரங்களுக்குள் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதை தொடா்புடையத் துறை அலுவலா்கள் உறுதிப்படுத்த வேண்டும். இந்த உத்தரவுகள் நிறைவேற்றப்பட்ட விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக வழக்கு விசாரணை வரும் ஜன. 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

முழு கட்டுரையைப் படிக்க →