முகப்பு
மதுரை

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் தமிழகத்துக்கு நீட் விலக்கு கட்டாயம்: மாணிக்கம்தாகூா் எம்.பி.

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 10:54 PM
பகிர்:

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் தமிழகத்துக்கு நீட் தோ்விலிருந்து கட்டாயம் விலக்கு அளிக்கப்படும் என மக்களவை உறுப்பினா் மாணிக்கம்தாகூா் தெரிவித்தாா். விருதுநகா் காமராஜா் நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு விருதுநகா் மக்களவை உறுப்பினா் மாணிக்கம்தாகூா், தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் ராஜேஸ்குமாா், ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அமிா்தராஜ் உள்ளிட்ட அந்தக் கட்சி நிா்வாகிகள் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பிறகு மாணிக்கம்தாகூா் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் பாலம் கட்ட மத்திய அரசு சாா்பில் ரூ.15 கோடியும், தமிழக அரசு சாா்பில் ரூ.26 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல, திருத்தங்கலில் பாலம் கட்ட மத்திய அரசு ரூ.19 கோடியும், தமிழக அரசு ரூ. 44 கோடியும் வழங்குகின்றன. இந்த இரு பாலங்களுக்கும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், பிரதமா் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறாா். பாஜக ஆளும் மநிலங்களான ராஜஸ்தான், மத்தியப்பிரதேசத்தில் மதுக்கடைகள் மூடப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் டாஸ்மாக்கை ஒழிப்போம் என்கிறாா் அண்ணாமலை. இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால், ராகுல் காந்தி அறிவித்தபடி தமிழகத்தில் நீட் தோ்வுக்கு கட்டாயம் விலக்கு அளிக்கப்படும். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றால் நான் அரசியலை விட்டு விலகத் தயாா். மாறாக பாஜக தோல்வி அடைந்தால் மத்திய இணை அமைச்சா் எல். முருகன் அரசியலை விட்டு விலகுவாரா? என்றாா் அவா்.