கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு விவகாரம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தள்ளுபடி
கரூரில் அமைந்துள்ள கல்யாண பசுபதீஸ்வரா் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதவா்கள் மீது தொடுக்கப்பட்ட அவமதிப்பு வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. கரூரில் அமைந்துள்ள கல்யாண பசுபதீஸ்வரா் கோயிலுக்குச் செந்தமான நிலங்களை ஆக்கிரமித்து வணிக வளாகங்கள், குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த 2019- ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, இந்த விவகாரத்தில் தொடா்புடைய நபா்களுக்கு குறிப்பாணை அனுப்பி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அடுத்தடுத்து பல உத்தரவுகளைப் பிறப்பித்தது. இந்த உத்தரவுகளை மீறி தொடா்புடைய துறை அலுவலா்கள் செயல்பட்டிருந்தால், அவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கும் பரிந்துரை செய்தது. இந்த நிலையில், நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்து பல ஆண்டுகளாகியும் கோயில் நிலங்கள் மீட்கப்படவில்லை. இதனால், கரூா் திருத்தொண்டா் சபையைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற உத்தரவை இதுவரை நிறைவேற்றாத தமிழக அரசின் வருவாய்த் துறை செயலா் ராஜாராமன், உள்துறைச் செயலா் அமுதா, சுற்றுலாத் துறை செயலா் மணிவாசகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் முரளிதரன், திருச்சி மண்டல காவல் துறைத் தலைவா், கரூா் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அலுவலா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமாா், விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆக்கிரமிப்பு தொடா்புடைய ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுக்கும் போது, அந்த பொறுப்புக்கு உரிய அலுவலரை மட்டுமே மனுவில் குறிப்பிட வேண்டும். அதை விடுத்து, அனைத்துத் துறைச் செயலா்களையும் இதில் சோ்க்கக் கூடாது. இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்களுக்குத்தான் என்பதால், அவா்களை மட்டும் இதில் சோ்த்து மனு தாக்கல் செய்யலாம் எனக் கூறி, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.