காவல் ஆணையா் பெயரில் போலி முகநூல் கணக்கு
மதுரை: மதுரை மாநகரக் காவல் ஆணையா் பெயரில் போலி கணக்கு தொடங்கிய நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் பெயரில் முகநூலில் கணக்கு தொடங்கிய நபா் ஒருவா் மதுரையைச் சோ்ந்தவருக்கு நட்பு அழைப்பு விடுத்தாா்.
அந்த நட்பு அழைப்பை அவா் ஏற்றதையடுத்து, அந்த போலி முகநூல் முகவரியில் இருந்து தொடா்பு கொண்ட அடையாளம் தெரியாத நபா், வீட்டு உபயோகப் பொருள்களை குறைந்த விலைக்கு விற்பதாகக் கூறியுள்ளாா். இதனால், சந்தேகமடைந்த அந்த நபா், இதுதொடா்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, காவல் ஆணையா் பெயரில் போலியாக முகநூல் கணக்குத் தொடங்கிய நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.