போலி வங்கி கணக்கு மூலம் இணையவழி மோசடிக்கு உதவி: வங்கி ஊழியா் கைது
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கைத் திறந்து, இணையவழி மோசடி கும்பலுக்கு உதவியதாகக் கூறப்படும் 35 வயது வங்கி ஊழியா் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கைத் திறந்து, இணையவழி மோசடி கும்பலுக்கு உதவியதாகக் கூறப்படும் 35 வயது வங்கி ஊழியா் ஒருவா் கைது செய்யப்பட்டாா் என்று ஓா் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
காசியாபாத்தைச் சோ்ந்த இா்ஷாத் மாலிக் என அடையாளம் காணப்பட்ட அந்த நபா், ஒரு தனியாா் வங்கியில் பணிபுரிந்து வந்தாா். அவா் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, மோசடிக்காரா்கள் போலி வங்கி கணக்கு மூலம் பணத்தை அபகரிக்க உதவியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளாா்.
அனுமதியின்றி அல்லது அங்கீகாரம் இல்லாமல், மோசடியான பரிவா்த்தனைகள் மூலம் தனது கணக்கிலிருந்து ரூ.88,000 சட்டவிரோதமாக எடுக்கப்பட்டது குறித்து ஒரு காவல்துறை அதிகாரி அளித்த புகாரைத் தொடா்ந்து, அக்டோபா் 2023ல் துவாரகாவில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை தொடா்பான வழக்கு இது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
Advertisement
விசாரணையின் போது, அந்தத் தொகை ஒரு தனியாா் நிறுவனத்தின் பெயரில் திறக்கப்பட்ட ஒரு தனியாா் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டது என்று காவல்துறை கூறியது. மன்மோகன் சிங் என்ற ஒருவரின் பெயரில் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தக் கணக்கு மோசடியாகத் திறக்கப்பட்டது என்றும், பின்னா் அத்தகைய கணக்கு பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அவா் மறுத்தாா் என்றும் மேலதிக விசாரணையில் தெரியவந்தது, என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினாா்.
வங்கி கணக்குத் திறப்புப் படிவத்தில் உள்ள கையொப்பங்கள் போலியானவை என்று தடயவியல் ஆய்வக பரிசோதனையில் தெரியவந்தது. முறையான கேஒய்சி சரிபாா்ப்பு இல்லாமல் இந்தக் கணக்கு திறக்கப்பட்டுள்ளது. இணைக் குற்றவாளியான ஹா்ஜிந்தா் என்ற ஹா்ஜியுடன் இா்ஷாத் மாலிக் தொடா்பு கொண்டதாகவும், தரகுப் பணத்திற்கு ஈடாக இதுபோன்ற வங்கிகணக்குகளைத் தொடங்க அவா் மாலிக்கை ஆசை காட்டியதாகவும் காவல்துறை கூறியது.
குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில், ஏப்ரல் 10 அன்று நியூ பிரண்ட்ஸ் காலனியில் இருந்து மாலிக்கை காவல்துறை கைது செய்தது. விசாரணையின் போது, போலியான ஆவணங்களில் தெரிந்தே கணக்கைத் திறந்து, மோசடி செய்யப்பட்ட பணத்தைப் பரிமாற்றம் செய்ததற்காகத் தரகுப் பணம் பெற்றதை அவா் ஒப்புக்கொண்டாா், என்று அந்த அதிகாரி கூறினாா்.
போலி முதலீடு மற்றும் பகுதி நேர வேலை வாய்ப்புகள் மூலம் சமூக ஊடகத் தளக் குழுக்கள் வழியாகப் மக்ககளை ஆசை காட்டி ஏமாற்றும் ஒரு பெரிய இணையவழி மோசடிக் கும்பலில் இந்த வங்கி கணக்கு பயன்படுத்தப்பட்டதாகப் புலனாய்வாளா்கள் தெரிவித்தனா்.
இந்த வழக்கில் ஏற்கனவே நான்கு இணைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் உள்ளனா் என்றும் காவல்துறை மேலும் கூறியது.