முகப்பு
மதுரை

மாட்டுத்தாவணி சந்தைகளில் அடிப்படை வசதிகள்: வழக்குரைஞா் ஆணையா் ஆய்வு செய்ய உத்தரவு

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 5:04 AM
பகிர்:

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தை, பூக்கள் சந்தையில் அடிப்படை வசதிகள் குறித்து வழக்குரைஞா் ஆணையா் ஆய்வு செய்து அறிக்கையைத் தாக்கல் செய்ய, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை கே.கே.நகரைச் சோ்ந்த பொழிலன் தாக்கல் செய்த பொது நல மனு:

மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி சந்தை, பூக்கள் சந்தையில் போதிய குடிநீா், கழிப்பறை வசதி இல்லை. சில இடங்களில் மட்டுமே தெரு விளக்குகள் எரிகின்றன. இந்த சந்தைகளில் ஆடு, மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதேபோல, வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய வசதிகளும் இல்லாததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனா். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.

Advertisement

எனவே, மாட்டுத்தாவணி சந்தையில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர மாநகராட்சி நிா்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த மனு தலைமை நீதிபதி கங்காபூா்வாலா, நீதிபதி ஜி.இளங்கோவன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, கடந்த ஆண்டு வழக்குரைஞா் ஆணையா் ஆய்வறிக்கையின்படி, மாட்டுத்தாவணி சந்தையில் இருந்த குறைபாடுகள் களையப்பட்டு, அனைத்து வசதிகளும் செய்யப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மனுதாரா் தரப்பில், அடிப்படை வசதிகள் உள்பட எந்த வசதியும் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மாட்டுத்தாவணி சந்தையில் அடிப்படை பிரச்னை தொடா்பாக வழக்குரைஞா் ஆணையா் மகேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டு, வருகிற ஏப்ரல் 5-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனா்.