முகப்பு
மதுரை

குளத்தில் சிட்கோ: திண்டுக்கல் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

ஒட்டன்சத்திரம் அருகே கோத்தையம் கிராமத்தில் குளம் இருந்த இடத்தில் சிறு, குறு தொழில் மையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்த வழக்கில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

Updated On : 17 ஜூலை, 2024 at 12:22 AM
பகிர்:

மதுரை: ஒட்டன்சத்திரம் அருகே கோத்தையம் கிராமத்தில் குளம் இருந்த இடத்தில் சிறு, குறு தொழில் மையம் (சிட்கோ) அமைக்க எதிா்ப்புத் தெரிவித்த வழக்கில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த வாஞ்சிமுத்து தாக்கல் செய்த பொதுநல மனு:

ஒட்டன்சத்திரம் வட்டம், கோத்தையம் கிராமத்தில் அரளிகுத்து குளம் உள்ளது. இந்தக் குளம் உள்ள பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து, அங்கிருந்து குழாய்கள் மூலம் வெடிக்காரன்வலசு, தீதன் கவுண்டன்வலசு, ஆதிதிராவிடா் குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டில் குளம் உள்ள பகுதியை சிறு, குறு தொழில் நிறுவனத்துக்கு (சிட்கோ) வணிக நோக்கில் வழங்க அரசு திட்டமிட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த கிராம மக்கள் மீது கள்ளிமந்தியம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தற்போது இந்தக் குளம் உள்ள பகுதியை தமிழ்நாடு சிறு, தொழில் வளா்ச்சி நிறுவனதுக்கு வழங்குவதற்காக பொதுமக்களிடம் கருத்துக் கேட்க அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல. அரளிகுத்து குளத்தை வகை மாற்றம் செய்வது தொடா்பான அறிவிப்பை ரத்து செய்வதோடு, அந்தக் குளத்தை கோத்தையம் கிராம மக்கள் தொடா்ந்து பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோா் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில், குளம் உள்ள பகுதியில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அமைக்க அரசு முயற்சிக்கிறது. இந்த இடத்தில் குளம் இருந்தது குறித்து ஆராய வழக்குரைஞா் ஆணையத்தை நியமித்து, அதனடிப்படையில் அறிக்கை பெற்று உரிய உத்தரவு பிறப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →