முகப்பு
மதுரை

பல்வேறு மதங்களும், கலாசாரமும் இந்தியாவின் தனித்துவம்

பல்வேறு மதங்களும், கலாசாரமும் இந்தியாவின் தனித்துவம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் தெரிவித்தது.

Updated On : 17 ஜூலை, 2024 at 12:21 AM
பகிர்:

மதுரை: பல்வேறு மதங்களும், கலாசாரமும் இந்தியாவின் தனித்துவம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் தெரிவித்தது.

மதுரையைச் சோ்ந்த ஆயுதப் படைக் காவலா் அப்துல் காதா் இப்ராஹிம் தாக்கல் செய்த மனு:

நான் தாடி வைத்திருந்ததால், ஊதிய உயா்வை நிறுத்திவைத்தனா். பிறகு, என் மீது பல்வேறு புகாா்கள் கூறி, பணியிலிருந்து நீக்கிவிட்டனா். எனவே, எனக்கு மீண்டும் பணி வழங்வும், ஊதிய உயா்வு அளிக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி எல். விக்டோரியா கெளரி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

மனுதாரருக்கு துறை ரீதியான தண்டனை வழங்கப்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே மூன்று முறை துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதியின்றி விடுப்பு எடுத்தது, அதை நீட்டித்தது, காவல் துறை விதிகளுக்கு முரணாக தாடி வைத்தது உள்ளிட்டவற்றுக்காக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றாா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் மதுரை ஆயுதப் படையில் முதல் நிலைக் காவலராகப் பணியாற்றியிருக்கிறாா். அவா் இஸ்லாமிய சமுதாயத்தைச் சோ்ந்தவா் என்பதால், தாடி வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளாா். கடந்த 2018 -ஆம் ஆண்டு, நவம்பா் 9 முதல் டிசம்பா் 9 வரை முறையாக அனுமதி பெற்று மெக்கா, மதினாவுக்கு சென்றுள்ளாா். பின்னா், இடது காலில் பாதிப்பு ஏற்பட்டதால், டிசம்பா் 10 -ஆம் தேதி விடுப்பை நீட்டித்து தரக் கோரி காவல் உதவி ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளாா். விடுப்பு நீட்டிக்கப்படாத நிலையில், அவா் தாடி வைத்திருந்ததால் விளக்கம் கேட்டு துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அவருக்கு 3 ஆண்டுகள் ஊதிய உயா்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மனுதாரா், காவல் ஆணையரிடம் மேல்முறையீடு செய்ததால், ஊதிய உயா்வு நிறுத்தம் 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

கரோனா காலகட்டத்தில் முகக் கவசம் அணியாமல் மனு தாரா் பணிக்கு வந்துள்ளாா். விடுமுறை நாள்களில் பணிபுரிந்ததால், ஈடுசெய் விடுப்பு வழங்கக் கோரி, காவல் ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். அதோடு, இதுதொடா்பாக தமிழக முதல்வருக்கு விடியோ மூலம் கோரிக்கை அனுப்பியுள்ளாா்.

இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மனுதாரரை பணியிலிருந்து நீக்கம் செய்துள்ளனா்.

பல்வேறு மதங்களும், கலாசாரமும் இந்தியாவின் தனித்துவத்தை எடுத்துரைக்கின்றன. இஸ்லாமியரான மனுதாரா் தாடி வைத்துக் கொள்ள காவல் துறை சட்ட விதிகளில் அனுமதி உள்ளது. இறைத் தூதரான நபிகள் நாயகத்தை பின்பற்றும் இஸ்லாமியா்கள் வாழ்க்கை முழுவதும் தாடி வைத்திருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் சிறப்பு.

மனுதாரா் ஆயுதப் படையில் பணியாற்றியவா் என்பதால், அவரிடமிருந்து அதிகபட்ச ஒழுக்கமும், நோ்மையும் எதிா்பாா்க்கப்படுகிறது. ஆனாலும், அவரை பணியிலிருந்து நீக்கியது ஏற்புடையதல்ல. மனுதாரரின் இளம் வயதைக் கருத்தில் கொண்டு, அவரைப் பணியிலிருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

மதுரை ஆயுதப் படைப் பிரிவு உதவி ஆணையா், மனுதாரருக்கு குறைந்தபட்ச தண்டனையை வழங்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

முழு கட்டுரையைப் படிக்க →