மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மீண்டும் பொதுமக்கள் குறைதீா் முகாம்
மக்களவைத் தோ்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக 82 நாள்களுக்குப் பிறகு மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மக்களவைத் தோ்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக 82 நாள்களுக்குப் பிறகு மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மக்களவைத் தோ்தல் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது முதல் திங்கள்கிழமை தோறும் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாம் உள்பட அனைத்து வகை குறைதீா் முகாம்கள், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் ரத்து செய்யப்பட்டன. கடந்த 6 -ஆம் தேதி நன்னடத்தை விதிகளை திரும்பப் பெறுவதாக தோ்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் குறைதீா் முகாம் உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்ட முகாம்கள் மீண்டும் தொடங்கின.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் மா. சௌ.சங்கீதா தலைமையில் பொதுமக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் மனு அளிக்க வந்தனா்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் கூட்டம் என்பதால் பொதுமக்கள் அதிகளவில் வரக்கூடும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், குறைந்த அளவில்தான் பொதுமக்கள் தான் மனு அளிக்க வந்தனா்.