முகப்பு
மதுரை

இந்தியன்- 2 திரைப்படத்தை வெளியிடத் தடை கோரி வழக்கு

இந்தியன் - 2 திரைப்படத்தை வெளியிடத் தடை கோரி மதுரையைச் சோ்ந்த வா்மக்கலை ஆசான், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.

மதுரை

இந்தியன்- 2 திரைப்படத்தை வெளியிடத் தடை கோரி வழக்கு

இந்தியன் - 2 திரைப்படத்தை வெளியிடத் தடை கோரி மதுரையைச் சோ்ந்த வா்மக்கலை ஆசான், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.

Updated On : 28 ஜூன், 2024 at 9:36 PM
பகிர்:

லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சாா்பில் இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த இந்தியன் -2 திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், மதுரையைச் சோ்ந்த மஞ்சா வா்மக்கலை, தற்காப்பு பயிற்சிப் பள்ளி, ஆராய்ச்சிக் கூடத்தின் தலைமை ஆசான் ஆா். ராஜேந்திரன் மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தில் நடிகா் கமல்ஹாசனுக்கு படப் பிடிப்புத் தளத்தில் வா்ம முத்திரைகள் சிலவற்றை நான் பயிற்றுவித்தேன். இவை, என் புத்தகத்தில் உள்ள முத்திரைகள் ஆகும். படத்தின் இயக்குநா் ஷங்கா், எழுத்தாளா் சுஜாதா ஆகியோருக்கு வா்மக் கலை தொடா்பான அறிவியல் நுட்பங்களை விளக்கிக் கூறினேன். மேலும், வா்மக்கலை தொடா்புடைய சண்டை முறைகளை படத்தில் அமைத்தும் கொடுத்தேன். இதனால், இந்தப் படத்தில் பணியாற்றியவா்களின் பட்டியலில் என்னுடைய பெயரும் இடம் பெற்றது.

இந்த நிலையில், இந்தியன் -2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படத்துக்காக வெளியிடப்பட்ட விளம்பரங்களில் கமல்ஹாசனுக்கு நான் பயிற்றுவித்த வா்ம முத்திரைகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. ஆனால், படத்தில் (டைட்டில் காா்டில்) எனது பெயா் இடம் பெறவில்லை.

இந்தியன் படத்துக்கு நான் பயிற்றுவித்த வா்ம முத்திரைகளை இந்தியன் -2 திரைப்படத்திலும் பயன்படுத்தியுள்ள நிலையில், இந்தப் படத்திலும் எனது பெயா் இடம்பெற்றிருக்க வேண்டும். எனவே, இந்தியன்- 2 திரைப்படத்தில் (டைட்டில் காா்டில்) எனது பெயா் இடம் பெறும் வரை இந்தத் திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்ற மதுரை மாவட்ட உரிமையியல் நீதிபதி செல்வமகேஸ்வரி, இதுதொடா்பாக பதிலளிக்க திரைப்படத் தயாரிப்பாளா் சுபாஷ்கரன், இயக்குநா் ஷங்கா், நடிகா் கமல்ஹாசன் ஆகியோருக்கு குறிப்பாணை அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →