முகப்பு
மதுரை

மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்களுக்கு மேம்பாட்டு நிதியாக ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு

மதுரை மாநகராட்சி நிதி நிலை அறிக்கையில் மாமன்ற உறுப்பினா்களுக்கு வாா்டு மேம்பாட்டு நிதியாக ரூ. 25 லட்சம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

Updated On : 5 மார்ச், 2024 at 5:16 AM
மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த மேயா் வ. இந்திராணி உடன் ஆணையா் ச. தினேஷ்குமாா், துணை மேயா் தி. நாகராஜன் உள்ளிட்டோா்.
பகிர்:

மதுரை: மதுரை மாநகராட்சி நிதி நிலை அறிக்கையில் மாமன்ற உறுப்பினா்களுக்கு வாா்டு மேம்பாட்டு நிதியாக ரூ. 25 லட்சம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மேயா் வ. இந்திராணி தலைமை வகித்தாா். ஆணையா் ச. தினேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். இதைத்தொடா்ந்து, மேயா் வ. இந்திராணி நிதிநிலை அறிக்கையைச் சமா்பித்தாா். இதில், 2024-2025 ஆம் ஆண்டில் மாநகராட்சியின் சொந்த வருவாய், அரசின் பல்வேறு திட்டங்களுக்கான மானியம், திட்டங்களுக்கான கடன்கள் உள்பட மொத்த வருவாய் ரூ.1296.07 கோடியாகவும், மொத்த செலவு ரூ.1290.22 கோடியாகவும் உள்ளது. நிதி நிலை அறிக்கையில் மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. பள்ளி மேம்பாட்டுக்கு ரூ.8.5 கோடி: மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் ரூ. 8.5 கோடியில் புதிய வகுப்பறைகள், கழிவறைகள் அமைத்தல், பொலிவுறு வகுப்பறைகள் உள்ளிட்டவை அமைக்கப்படும். மேலும், மாநில நிதிக் குழு மானியத்தின் நிதியுதவியுடன் ஏராளமான பள்ளிகளில் சீரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதுதவிர, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களிடமிருந்து நிதியுதவி பெற்று பள்ளிகள் மேம்படுத்தப்படும். பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அறம் சாா்ந்த வகுப்புகள் வாரத்தில் ஒரு நாள் நடத்தப்படும். மன நல ஆலோசனைகள் வழங்கப்படும். மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்று மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். இந்தப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் அடையாள அட்டை வழங்கப்படும். மாணவ, மாணவிகளின் நலன் கருதி காவலா்கள் நியமிக்கப்படுவா். பொது சுகாதாரம் : மதுரை மாநகரப் பகுதிகளில் ஏற்கெனவே 31 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. மேலும், கூடுதலாக 2 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும். மதுரை பாத்திமா நகா், அனுப்பானடி, பாலரெங்காபுரம், பி.பி.குளம் ஆகிய பகுதிகளில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 4.8 கோடியில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும். இதேபோல, சுப்பிரமணியபுரம், கொடிக்குளம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.1.2 கோடியில் கூடுதல் கட்டடம் கட்டப்படும். 15-ஆவது நிதிக்குழு திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 45 நகா்ப்புற நலவாழ்வு மையங்களுக்கு மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள், மருத்துவப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மீதமுள்ள 17 மையங்களுக்கு விரைவில் பணியாளா்கள் நியமிக்கப்படுவா். திடக்கழிவு மேலாண்மைப் பணிகள்: மதுரை மாநகராட்சி முழுவதும் கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பா் முதல் தனியாா் நிறுவன ஒப்பந்தத்துடன் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகரில் இரவு நேரங்களில் செயல்படும் வணிக நிறுவனங்களிடமிருந்து குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்தாண்டு 268 மெட்ரிக் டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபா்களுக்கு ரூ. 15, 09, 490 அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும், விதிகளை மீறி பொது இடங்களில் குப்பைகள் கொட்டியதாக ரூ. 12,06,200 அபராதம் விதிக்கப்பட்டது. மதுரை மாநகரில் விலங்குகளின் தொல்லைகளை குறைக்க கூடுதலாக கருத்தடை மையம் அமைக்கப்படும். சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ. 10,38,700 அபராதம் விதிக்கப்பட்டது. நடப்பாண்டில் சாலைகளில் திரியும் விலங்குகளை பிடிக்க கூடுதல் வாகனங்கள் வாங்கப்படும். வியாபாரிகளுக்கான சாலையோர வியாபாரிகள் திட்டத்தின் கீழ் வியாபாரிகளை மேம்படுத்தும் நோக்கில் இரண்டாம் கட்டமாக ரூ. 1.18 கோடியில் தள்ளுவண்டிகள் வழங்கப்பட உள்ளன. பிறப்பு, இறப்புச் சான்றிதழ் கோரும் விண்ணப்பதாரா்களுக்கு சான்றிதழ் விரைவில் வழங்கப்படும். நடப்பு நிதியாண்டில் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் ரூ. 101.02 கோடியில் சாலைப் பணிகள் நடைபெற உள்ளன. மதுரை மாநகராட்சி கீழமாரட் வீதியில் செயல்படும் வெங்காயச் சந்தை ரூ. 10.30 கோடியில் மாட்டுத்தாவணி அருகே செயல்படும் காய்கறிச் சந்தைப் பகுதிக்கு மாற்றியமைக்கப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். ஏற்கெனவே 77 வாா்டுகளில் மாமன்ற அலுவலகக் கட்டடங்கள் உள்ளன. எஞ்சியுள்ள வாா்டுகளிலும் மாமன்ற அலுவலகக் கட்டடம் கட்டப்படும். மதுரை மாநகராட்சி பகுதிகளில் புதைச் சாக்கடைகள் கணினி மூலம் கண்காணிக்கப்படும். மேலும், நகருக்குள் உள்ள 16 கால்வாய்கள் முறையாக தூா்வாரப்படும். மதுரை மாநகராட்சியில் உள்ள பூங்காக்கள் வரும் நிதியாண்டில் அரசு நிதி, தனியாா் நிதி பங்களிப்புடன் முழுமையாக மேம்படுத்தப்படும். மாநகராட்சி வாா்டுகளில் மாமன்ற உறுப்பினா்கள் உறுப்பினா்கள் பரிந்துரைக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஒவ்வொரு வாா்டுக்கும் ரூ.25 லட்சம் சிறப்பு நிதி இந்த ஆண்டில் வழங்கப்படும். மேலும், முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் விரைவில் நிறைவு பெறும். வரும் ஆண்டுகளில் மதுரை மாநகராட்சிக்கு தடையில்லா குடிநீா் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கூட்டத்தில் மண்டலத் தலைவா்கள், உதவி ஆணையா்கள், மாமன்ற உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா். இந்தக் கூட்டத்தை அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் புறக்கணித்தனா்.