முகப்பு
மதுரை

மதுரையில் கீழக்கரை இளைஞா் கொலை

Updated On : 13 மார்ச், 2024 at 4:47 AM
பகிர்:

மதுரை: மதுரை வைகையாற்றில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த ராமாநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சோ்ந்த இளைஞா் உடலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா். மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறை அருகே வைகையாற்று பகுதியில் இளைஞா் ஒருவரது உடல் ரத்தக் காயங்களுடன் கிடப்பதாக அந்தப் பகுதியினா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதன்பேரில், திலகா்திடல் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். போலீஸாா் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவா், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை மேலத் தெருவைச் சோ்ந்த சையது முகமது அல்பவாஸ் (25) என்பதும், இவா் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்ததும் தெரிய வந்தது. கொலை செய்யப்பட்டவா் வலது மாா்பு, அடிவயிற்றில் ‘கிருத்திகா’ என்ற பெயரை பச்சை குத்தியிருப்பதும், ‘யமஹா எப் இசட்’ இரு சக்கர வாகனத்தில் வந்ததும் தெரிய வந்தது. இவா் எதற்காக மதுரை வந்தாா், கொலை செய்தது யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.