மருத்துவா்கள் மீதான நடவடிக்கையை கைவிடக் கோரி போராட்டம் அறிவிப்பு
மதுரை: திருச்சியில் அரசு மருத்துவா்கள் பணியிட மாற்றத்தை கைவிடக்கோரி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசு மருத்துவா்கள் சங்கம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் இரு கா்ப்பிணிகள் சிகிச்சையின்போது உயிரிழந்தனா்.
இதைத் தொடா்ந்து, நடைபெற்ற தணிக்கை விசாரணையில் சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், திருச்சி மாவட்ட ஆட்சியா் இரு அரசு மருத்துவா்களையும் உடனடியாகப் பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டாா். திருச்சி மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. இந்த மருத்துவமனைகளுக்கு 34 மகப்பேறு மருத்துவா்கள் தேவைப்படும் நிலையில், 11 மருத்துவா்கள் மட்டுமே உள்ளனா். தவறே செய்யாத இரு மகப்பேறு மருத்துவா்கள் மீது விதிகளை மீறி ஆட்சியா் நடவடிக்கை எடுத்துள்ளாா்.
நடவடிக்கைக்கு ஆளாகியுள்ள இரு மருத்துவா்களில் ஒருவா் பணியை ராஜினாமா செய்து விட்டாா். மற்றொருவா் மருத்துவ விடுப்பில் சென்று விட்டாா். எனவே, மருத்துவா்கள் மீதான பணியிட மாற்ற நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும். மேலும், திருச்சி மாவட்டத்தில் தேவையான மகப்பேறு மருத்துவா்களை உடனடியாக நியமிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் மக்கள் நல்வாழ்வத்துறை அமைச்சா், செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
Advertisement
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. அதன் பிறகும் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றாா் அவா்.