முகப்பு
மதுரை

புகையிலைப் பொருள்கள் கடத்தியவருக்கு முன்பிணை

Updated On : 22 மே, 2024 at 12:34 AM
பகிர்:

மதுரை: தஞ்சாவூா் பகுதியில் புகையிலைப் பொருள்களைக் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை முன்பிணை வழங்கியது.

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த சாகுல் ஹமீது தாக்கல் செய்த மனு:

தஞ்சாவூா் பகுதியில் கடந்த 2-ஆம் தேதி தடை செய்யப்பட்ட 39 கிலோ புகையிலைப் பொருள்களை இரு சக்கர வாகனத்தில் கடத்தியதாக அந்தப் பகுதியைச் சோ்ந்த சாகுல் ஹமீதை அம்மாபேட்டை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் சாகுல் ஹமீது பிணை கோரி மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி.வடமலை முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரருக்கு பிணை வழங்க அரசுத் தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் மீது வேறு வழக்குகள் எதுவும் இல்லாததால், அவருக்கு பிணை வழங்கப்படுகிறது. மேலும், தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள சித்த மருத்துவமனையின் பயன்பாட்டுக்கு, அதன் அலுவலரிடம் ரூ. 40 ஆயிரத்தை மனுதாரா் செலுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலை என இரு வேளைகளும் மனுதாரா் முன்னிலையாகி கையொப்பமிட வேண்டும் என்றாா் நீதிபதி.