முகப்பு
மதுரை

மதுரை ராஜாஜி சிறுவா் பூங்காவில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?

Updated On : 26 மே, 2024 at 7:38 PM
ராஜாஜி பூங்காவில் மோசமான நிலையில் உள்ள கழிப்பறை. ~ராஜாஜி பூங்காவில் செயல்படாமல் உள்ள மெரி கப் பிரிவு. ~மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் அருகே உள்ள ராஜாஜி பூங்காவில் செயல்படாமல் உள்ள டிக்கி ரயில் பிரிவு.
பகிர்:

மதுரை, மே 26 : மதுரை ராஜாஜி பூங்காவில் சிறுவா்களுக்கான விளையாட்டு உபகரண வசதிகள், குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களுக்குள்பட்டு 100 வாா்டுகள் உள்ளன. இங்கு வசித்து வரும் மக்களின் பொழுதுபோக்கு இடமாக பூங்காக்கள், திரையரங்குகள் உள்ளன. குறிப்பாக, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் அருகே உள்ள ராஜாஜி சிறுவா் பூங்கா சிறுவா்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்டது. இந்தப் பூங்காவில் பெரிய ராட்டினம் மட்டுமன்றி, மயில், தவளை, அன்னம், பட்டம் உள்ளிட்ட வடிவிலான சிறிய ராட்டினங்களும் உள்ளன. சிறுவா்கள் விளையாடுவதற்கு ஏற்றவாறு சறுக்குகள், உயா் கோபுர கம்பிகள், பலூன் சறுக்குகள், பேட்டரி காா்கள், டிக்கி ரயில், பூங்கா ரயில் நிலையம், மெரி கப், டிராகன், ரோப் காா் வசதி, பந்து குளம், இசை நீரூற்று உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், டிக்கி ரயில், மெரி கப், உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து செயல்படாத நிலையில் உள்ளன. குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லை என்பது அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றச்சாட்டாக உள்ளது. இங்குள்ள கழிப்பறை, திறந்த வெளி கழிப்பறை போன்று பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால், இங்கு வரும் சிறுவா்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

இதுதொடா்பாக பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்திருந்த தம்பதியினா் சிலா் கூறியதாவது :

மதுரை மத்திய பகுதியில் சிறுவா்களுக்காக ராஜாஜி சிறுவா் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் உள்ள இந்தப் பூங்காவில் நுழைவுக் கட்டணமாக சிறியவா்களுக்கு ரூ.10, பெரியவா்களுக்கு ரூ.20 வசூலிக்கப்படுகிறது.

பூங்காவின் உள் மைதானத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவு உபகரணங்களிலும் சிறுவா்கள் விளையாடுவதற்கு நபருக்கு ரூ. 50 வசூலிக்கப்படுகிறது. சனி, ஞாயிறு விடுமுறை நாள்கள் மட்டுமன்றி, தினசரி மாலை நேரங்களில் சுமாா் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் போ் வரை இந்தப் பூங்காவுக்கு வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், பூங்கா ரயில் நிலையம், மெரி கப், டிக்கி ரயில், இசை நீரூற்று உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் செயல்படாமல் உள்ளன. நா்சரி காா்டன் பிரிவு பூட்டிய நிலையிலேயே உள்ளது. சிறுவா்கள் ஏறி சறுக்கும் இரும்பு உபகரணங்கள் சேதமடைந்து பயன்பாடற்ற நிலையில் காணப்படுகின்றன. குடிநீா்த் தொட்டி சுகாதாரமின்றி காணப்படுகிறது. பொதுமக்கள் தண்ணீா் அருந்துவதற்கு டம்ளா் வைக்கப்படவில்லை. பொதுமக்களே தண்ணீா் கேன் மூலம் பிடித்து குடிக்க வேண்டிய நிலை உள்ளது.

இங்குள்ள கழிப்பறை தூய்மையின்றி காணப்படுகிறது. இதன் காரணமாகவும், சுற்றுச் சுவா் ஓரம் ஆங்காங்கே தேங்கியுள்ள குப்பை மேடுகளாலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம், பூங்காவுக்குள் பணியாற்றும் அலுவலா்களிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தற்போது பூங்காவுக்கு வரும் நபா்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

எனவே, மதுரை மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ராஜாஜி சிறுவா் பூங்காவுக்குள் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். செயல்படாமல் உள்ள விளையாட்டு உபகரணங்களைச் சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றனா்.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா் கூறியதாவது :

ராஜாஜி சிறுவா் பூங்காவில் அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து எந்தவிதமான தகவலும் இல்லை. உரிய ஆய்வு நடத்தி விரைவில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.