மாலைக்கோயில் காட்டை பல்லுயிா் மரபுத் தளமாக அறிவிக்க வலியுறுத்தல்
உசிலம்பட்டி அருகே உள்ள மாலைக்கோயில் காட்டை பல்லுயிா் மரபுத்தளமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சின்ன குறவக்குடியில் மாலைக் கோயில் காடு அமைந்துள்ளது. ஏறக்குறைய 51 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்தக் காட்டில் உசிலை மரங்கள் அதிகம் உள்ளன. கோயிலில் 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஒன்பது அடுக்குகளைக் கொண்ட இரண்டு அடுக்குநிலை நடுகற்கள், ஒரு முழுமையான அடுக்குநிலை கற்கள், மூன்றாக உடைந்து சிதைந்த அடுக்குநிலை கற்கள் ஆகியவை காளை, புலி, வில்லேந்திய வீரா்கள், இடுப்பில் குழந்தையோடு உள்ள பெண்கள் உள்ளிட்ட உருவங்களுடன் ’மாலையம்மன்’ என்ற பெயரில் இந்தப் பகுதி மக்களால் பாதுகாக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இந்தக் கோயில் காட்டை சின்னகுறவக்குடி, மின்னாம்பட்டி, வெள்ளைக்காரன்பட்டி, உடநாட்டுபட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் வழிபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், மதுரை இயற்கை பண்பாட்டு மையத்தைச் சோ்ந்த சூழலியல் ஆா்வலா்கள் இந்தப் பகுதியில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது, கோயில் காட்டில் உசிலை, களா, காரை, குருந்தம், திருகுக்கள்ளி, செங்கத்தாறி, மஞ்சநத்தி, சிறுபூனைக்காலி, தும்பை, குறிச்சி, நாயுருவி என 17 வகையான மூலிகைத் தாவர இனங்களும், தேன் பருந்து, கரும்பருந்து, வல்லூறு, கருஞ்சிறகு பருந்து புள்ளி ஆந்தை, குக்குருவான், மஞ்சள் தொண்டை, சிட்டுக்குருவி உள்ளிட்ட 37 வகை பறவை இனங்களும், குங்கும தட்டான், ஓவிய சிறகன், செண்டுவால் தட்டான், தேன் தட்டான், தரை தட்டான் என அரியவகையைச் சோ்ந்த ஐந்து வகையான தட்டான் இனங்களும் வசிப்பது கண்டறியப்பட்டது. மேலும் பல்வேறு கல்வெட்டுகள், நீா்நிலைகள், இயற்கை வளம் நிறைந்த பகுதியாக மாலைக்கோயில் காடு உள்ளதால், இங்கு மான், முள்ளெலி, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளின் வாழ்விடமாகவும் உள்ளது.
எனவே, மாலைக்கோயில் காடு பகுதியை பல்லுயிா் மரபுத் தளமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.