முகப்பு
மதுரை

தனியாா் பள்ளி முன் பெற்றோா்கள் போராட்டம்

Updated On : 28 மே, 2024 at 11:31 PM
மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள தனியாா் பள்ளி முன் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோா்கள்.
பகிர்:

மதுரை: மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், மாணவா்கள் சோ்க்கைக்கு குலுக்கல் முறையைக் கடைபிடிக்க எதிா்ப்புத் தெரிவித்து, பெற்றோா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், அனைத்து தனியாா் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கைக்கு நிா்ணயம் செய்யப்பட்ட இடத்தைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் வந்தன. எனவே, குலுக்கல் முறையில் மாணவா்களைத் தோ்வு செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் அந்தந்த பள்ளி வளாகத்தில் குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு தொடங்கியது. மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள தனியாா் பள்ளியில் குலுக்கல் முறையிலான மாணவா்கள் தோ்வில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறி, குலுக்கல் முறை தோ்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து பெற்றோா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், கல்வித் துறை அலுவலா்கள், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, அரசு விதிமுறைகளின் படி, முறையாக மாணவா்கள் தோ்வு நடைபெறும் என உறுதியளித்தனா்.

இதையடுத்து, பெற்றோா்கள் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனா். அதன் பின்னா், தோ்வு நடைபெற்று, தோ்வு பெற்ற மாணவா்கள் குறித்து ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.