முகப்பு
மதுரை

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.3 கோடி மோசடி: மூவா் கைது

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.3 கோடி மோசடி...

Updated On : 6 நவம்பர், 2024 at 9:53 PM
பகிர்:

இணையம் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி, தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சோ்ந்தவா்களிடம் ரூ. 3 கோடி மோசடி செய்ததாக கோவை, நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த மூவரை தனிப் படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இணையம் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என முகநூலில் பதிவிடப்பட்டிருந்த விளம்பரத்தைப் பாா்த்த மதுரை ஊரகக் காவல் துறைக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த சிலா், அதிலிருந்த கைப்பேசி எண்ணை தொடா்பு கொண்டனா். அவா்களிடம் பேசிய நபா்கள், தாங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் எனவும், தங்கள் நிறுவனத்தில் பணம் செலுத்தினால், அதிக லாபம் தரும் பங்குகளில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் எனவும் கூறினா். இதை நம்பியவா்களிடமிருந்து பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் ரூ. 92.16 லட்சம் பெறப்பட்டது. பிறகு, பணம் செலுத்தியவா்கள் அந்த கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ள முடியவில்லை.

இதையடுத்து, தாங்கள் மோசடி செய்யப்பட்டதை அறிந்து, பாதிக்கப்பட்டவா்கள் மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தனா். இதையடுத்து, மதுரை ஊரகக் காவல் துறையின் இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப் படை போலீஸாா் முதல் கட்டமாக பணம் பெறப்பட்ட வங்கிக் கணக்குகளிலிருந்த ரூ. 21.08 லட்சத்தை முடக்கினா். மேலும், அந்த வங்கிக் கணக்குகளுக்கு உரியவா்கள் குறித்து விசாரணை நடத்தினா்.

இதில் நாமக்கல் மாவட்டம், கணேசபுரத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் நித்தீஷ்குமாா் (24), லட்சுமணன் மகன் சந்திரசேகரன் (49), கோவை மாவட்டம், சவுரியாா்பாளையத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சுரேஷ் (42) ஆகியோா் என்பதும், இவா்கள் மூவரும் வங்கியில் நடப்பு வங்கி கணக்குத் தொடங்கி பொதுமக்களிடம் பண மோசடி செய்வதற்கு உடந்தையாக இருந்ததும், இந்த வங்கிக் கணக்கு மூலம் ரூ. ஒரு கோடி பணப் பரிவா்த்தனைக்கு லட்சக்கணக்கில் கமிஷன் பெற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, தனிப் படை போலீஸாா் இவா்கள் மூவரையும் கைது செய்து, மடிக்கணினி, கைப்பேசிகள், சிம்காா்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், மூவரிடமும் நடத்திய விசாரணையில் ஆந்திரம், பிகாா், குஜராத், ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம், கா்நாடகம், கேரளம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், நாகலாந்து, ஒடிஸா, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு ஆசைவாா்த்தைக் கூறி, ரூ. 3 கோடி வரை பண மோசடி செய்ததும் தெரியவந்தது.

இதனிடையே, குற்றவாளிகளைக் கைது செய்த தனிப் படை போலீஸாருக்கு, ஊரகக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த் பாராட்டுத் தெரிவித்து, சம்பந்தப்பட்ட பிற குற்றவாளிகளையும் விரைந்து கைது செய்ய அறிவுறுத்தினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →