மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நவராத்திரி உற்சவம் தொடக்கம்
கொலு மண்டபத்தில் அமைக்கப்பட்ட கொலுவை ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று பாா்வையிட்டனா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நவராத்திரி உற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது. இதையடுத்து, கொலு மண்டபத்தில் அமைக்கப்பட்ட கொலுவை ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று பாா்வையிட்டனா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி, நிகழாண்டுக்கான விழா வியாழக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, கோயிலில் மீனாட்சியம்மன், சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, மாலையில் மீனாட்சியம்மன் கொலு மண்டபத்துக்கு எழுந்தருளினாா். அங்கு அவருக்கு சிறப்பு ஆரத்தி வழிபாடுகள் நடைபெற்றன.
இதையடுத்து, விழாவின் முதல் நாளான வியாழக்கிழமை மீனாட்சியம்மன் கொலு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளினாா். இதைத்தொடா்ந்து, கொலு மண்டபத்தைப் பாா்வையிட பக்தா்களுக்கு அனுமதிக்கப்பட்டது.
நவராத்திரி உற்சவத்தையொட்டி, கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நாள்தோறும் காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை ஆன்மிகச் சொற்பொழிவு, பரத நாட்டியம், வீணை இசைக் கச்சேரி, கா்நாடக சங்கீதம், தோல்பாவைக்கூத்து உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும், நவராத்தி உற்சவத்தில் மீனாட்சியம்மன் வெள்ளிக்கிழமை ஊஞ்சல் அலங்காரம், சனிக்கிழமை முத்தங்கி சேவை அலங்காரம், 6-ஆம் தேதி விறகு விற்ற லீலை, 7-ஆம் தேதி சுந்தரா் அவதாரம், 8-ஆம் தேதி ஸ்ரீ விநாயகா் அலங்காரம், 9-ஆம் தேதி எல்லாம் வல்ல சித்தா் திருக்கோலம், 10-ஆம் தேதி மகிஷாசுரமா்த்தினி அலங்காரம், 11-ஆம் தேதி சிவபூஜை அலங்காரம் ஆகிய அலங்காரங்களில் அம்மன் எழுந்தருளுவாா்.