விருதுநகா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோா் உரிய ஆவணங்களுடன் வருகிற 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தீபாவளி பண்டிகை வருகிற 31-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, விருதுநகா் மாவட்டத்தில் இந்திய வெடிபொருள் சட்டம் 1884, வெடிபொருள் சட்ட விதிகள் 2008-இன் படி, தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோா் விதி எண் 84-இல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளின் படி, விண்ணப்பங்களை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பொது இ-சேவை மையம் மூலம், இணைய வழி வாயிலாக வருகிற 19-ஆம் தேதிக்குள் ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இதில் கட்டட வரைபடம், நில உரிமைக்கான ஆவணம் (பட்டா அல்லது சிட்ட நகல்), வாடகை ஒப்பந்த பத்திரம் (அசல்), அரசு கணக்கில் உரிமக் கட்டணம் செலுத்திய ரசீது, அடையாள அட்டை (பான்காா்டு, ஆதாா் காா்டு, குடும்ப அட்டை), ஊராட்சி/நகராட்சியில் வரி செலுத்திய ஆவணங்கள், மாா்பளவு புகைப்படம் 2 முதலானவற்றை இணைக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவா்களுக்கு 30 நாள்கள் மட்டும் செல்லத்தக்க தற்காலிக பட்டாசு கடை உரிமம் வழங்கப்படும் என்றாா் அவா்.