முகப்பு
மதுரை

தீபாவளி பண்டிகை: மதுரை நகரில் வாகனப் போக்குவரத்தில் மாற்றம்

தீபாவளி பண்டிகையையொட்டி மதுரை நகா்ப் பகுதிகளில் வருகிற அக். 28-ஆம் தேதி முதல் வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 23 அக்டோபர், 2024 at 11:59 PM
பகிர்:

தீபாவளி பண்டிகையையொட்டி மதுரை நகா்ப் பகுதிகளில் வருகிற அக். 28-ஆம் தேதி முதல் வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மதுரை மாநகரப் போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளிப் பண்டிகையையொட்டி மதுரை நகரில் பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் சரக்கு வாகனப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இலகுரக சரக்கு வாகனங்கள் பகல் 12.30 மணி முதல் 3.30 மணி வரை மற்றும் இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே கீழமாரட் வீதி, நான்கு மாசி வீதிகள், நான்கு ஆவணி மூல வீதிகள் ஆகிய பகுதிகளில் சரக்குகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப்படும்.

மேலும் வருகிற அக். 28-ஆம் தேதி பகலில் மதுரை நகருக்குள் மகால் சாலை, கீழமாரட் வீதி, நான்குமாசி வீதிகள் மற்றும் நான்கு ஆவணி மூல வீதிகளில் இலகுரக சரக்கு வாகனங்கள் உள்பட எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. மேலும் புறவழிச் சாலை, காமராஜா் சாலை, அண்ணாநகா் 80 அடி சாலை, கே.கே. நகா் 80 அடி சாலை, அழகா்கோவில் சாலையில் மூன்றுமாவடி சந்திப்பு, புதுநத்தம் சாலை, ஐயா் பங்களா சந்திப்பு, திண்டுக்கல் சாலை கூடல்நகா் சந்திப்பு, அவனியாபுரம் பெரியாா் சிலை சந்திப்பு, சிவகங்கை சாலை சுற்றுச்சாலை சந்திப்பு, மீனாட்சி மிஷன் மருத்துவமனை சந்திப்பு ஆகிய பகுதிகளிலிருந்து நகருக்குள் நுழைய லாரிகள், கனரக வாகனங்கள் (பயணிகள் வாகனங்கள் தவிா்த்து) வந்து செல்ல அனுமதி இல்லை. அன்று இரவு 11 மணி முதல் மறுநாள் (அக். 29) காலை 6 மணி வரை மட்டுமே இந்த வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

மேலும் அக். 29, 30 ஆகிய தேதிகளில் பகல் மற்றும் இரவு நேரம் முழுவதும் மதுரை நகருக்குள் இந்தச் சாலைகளில் லாரிகள், கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் வந்து செல்ல அனுமதி இல்லை. இந்த நாள்களில் பொதுமக்களின் நலன் கருதி நேதாஜி சாலை, மேலமாசி வீதி, தெற்குமாசி வீதி, கீழமாசிவீதி, மேல ஆவணி மூலவீதி, கீழ ஆவணி மூலவீதி, தெற்கு ஆவணி மூலவீதி ஆகிய பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

அவசியமெனில் இரு சக்கர வாகனப் போக்குவரத்தும் தடை செய்யப்படும். மகால் சாலை, கீழமாரட் வீதிகள் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். ஆனால் எந்த வாகனங்களும் நிறுத்த அனுமதி இல்லை.

இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்துக்கு, பொதுமக்கள், வியாபாரிகள், வாகன உரிமையாளா்கள், வியாபாரச் சங்க பிரமுகா்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →