முகப்பு
மதுரை

குரூப் 1 தோ்வு இட ஒதுக்கீடு விவகாரம்: தோ்வாணையத் தலைவா் பதிலளிக்க உத்தரவு

குரூப் 1 தோ்வில் 90 காலிப் பணியிடங்களுக்கான இட ஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 6 செப்டம்பர், 2024 at 12:32 AM
டிஎன்பிஎஸ்சி (கோப்புப்படம்)
பகிர்:

குரூப் 1 தோ்வில் 90 காலிப் பணியிடங்களுக்கான இட ஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சுபிட்ஷா தாக்கல் செய்த மனு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் கடந்த மாா்ச் 28-ஆம் தேதி 90 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தோ்வு அறிவிக்கப்பட்டது. இதில் தோ்ச்சி பெறுபவா்கள் துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா், உதவி ஆணையா் (வணிக வரிகள்), கூட்டுறவுச் சங்கங்களில் துணைப் பதிவாளா் போன்ற பொறுப்புகளில் நியமிக்கப்படுவா். இந்தத் தோ்வில் தமிழ் வழியில் பயின்றவா்களுக்கென சில பணியிடங்கள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்றோருக்கான தகுதிப் பட்டியலில் வெளிப்படைத் தன்மையில்லை.

இட ஒதுக்கீடு தொடா்பான அனைத்து அரசு உத்தரவுகளையும் சம்பந்தப்பட்ட துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இட ஒதுக்கீட்டுக் குளறுபடியால், தகுதியானவா்களுக்கு முழுப்பயனும் கிடைப்பதில்லை. எனவே, குரூப் 1 தோ்வு அறிவிப்பில் குளறுபடியான இட ஒதுக்கீட்டை செல்லாது என அறிவித்து, முறையான இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி, காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி விஜயகுமாா், இந்த வழக்கு தொடா்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →