கல் குவாரியைச் சுற்றி வேலி: அரசு பதிலளிக்க உத்தரவு
மதுரை ஒத்தக்கடை பகுதியில் பயன்பாடற்ற கல் குவாரியைச் சுற்றி கம்பி வேலி அமைக்க எவ்வளவு நாள்கள் ஆகும் என்பது குறித்து அரசுத் தரப்பில் பதிலளிக்க, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை ஒத்தக்கடை பகுதியில் பயன்பாடற்ற கல் குவாரியைச் சுற்றி கம்பி வேலி அமைக்க எவ்வளவு நாள்கள் ஆகும் என்பது குறித்து அரசுத் தரப்பில் பதிலளிக்க, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த அப்துல் ரகுமான் ஜலால் தாக்கல் செய்த மனு:
மதுரை யா.ஒத்தக்கடை யானைமலை அடிவாரத்தில் பழைமையான நரசிங்கம் பெருமாள் கோயில் உள்ளது. இந்தப் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு கல் குவாரி அமைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கினா். இந்தக் கல் குவாரி பயன்பாடற்ற நிலையில் காணப்படுவதோடுமட்டுமல்லாமல், தண்ணீரும் தேங்கியுள்ளது. கடந்தாண்டு இந்தக் கல் குவாரி தண்ணீரில் மூழ்கி 2 பெண்கள் உயிரிழந்தனா்.
பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கல் குவாரி பகுதிகளில் சமூக விரோதச் செயல்களும் நடைபெறுகின்றன. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, யானைமலை அடிவாரப் பகுதிகளில் உள்ள கல் குவாரியைச் சுற்றி கம்பி வேலை அமைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், பயன்பாடற்ற கல் குவாரியைச் சுற்றி கம்பி வேலி அமைப்பதற்காக ரூ. 30 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஒத்தக்கடை யானைமலை அடிவாரப் பகுதியில் பயன்பாடற்ற நிலையில் உள்ள கல் குவாரிகளைச் சுற்றி கம்பி வேலி அமைத்து முடிக்க எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்து அரசுத் தரப்பில் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.