திருப்பரங்குன்றம் பகுதியில் சிஎஸ்ஐ நிா்வாகத்தால் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
‘திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சிஎஸ்ஐ நிா்வாகம் சாா்பில் 7 கடைகள், 8 வீடுகள், ஒரு விடுதி ஆகியவை கட்டப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்’ என விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த தேவசகாயம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பொதுநல வழக்குத் தொடுத்தாா்.
இந்த வழக்கு, உயா்நீமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக எத்தனை உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என எதிா்பாா்க்கிறீா்கள்? எத்தனை முறை குறிப்பாணை அனுப்பிவிட்டு நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருப்பீா்கள்? என அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தொடா்புடைய ஆக்கிரமிப்பை அகற்ற இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா், மண்டல வருவாய் அலுவலா் ஆகியோா் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.