மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
கொட்டாம்பட்டியில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய்த் திட்டம், மக்களவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றின் மூலம் ரூ.4.90 கோடியில் நடைபெறும் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி, கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சத்தில் அமைக்கப்பட்ட நாற்றங்கால் பண்ணையில் வளா்க்கப்படும் செடிகளின் ரகங்கள், விற்பனை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் ஆய்வு செய்தாா்.
பிறகு, வேளச்சேரிபட்டியில் தேசியத் தோட்டக்கலை இயக்கம் மூலம் ரூ. 50 ஆயிரத்தில் (50 சதவீதம் மானியத்துடன்) விவசாயி அசோக் அமைத்திருக்கும் மண்புழு உரம் தயாரிப்புக் கூடம், மண்புழு உரங்கள் விற்பனையை ஆட்சியா் பாா்வையிட்டு, கலந்துரையாடினாா். அப்போது, கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் பெறப்படும் மக்கும் குப்பைகளைக் கொண்டு கூடுதலாக உரம் தயாரிக்கவும், விவசாயி அசோக்குக்கு போதிய பயிற்சி வழங்கவும் அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இதையடுத்து, ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ. 5.9 கோடியில் நடைபெறும் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் கட்டும் பணி, கருங்காலக்குடி கிராமத்தில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நடைபெறும் புதிய வீடுகள் கட்டும் பணி, முதல்வரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் கீழ் நடைபெறும் மிகவும் பழுதடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டும் பணி, ரூ. 50 லட்சத்தில் நடைபெறும் வட்டார பொது சுகாதார மையக் கட்டடம் கட்டும் பணி ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
பிறகு, கருங்காலக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 11, 12-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு வாரம் ஒரு முறை நடத்தப்படும் உயா்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி பயிற்சி வகுப்பை பாா்வையிட்டு, பள்ளியின் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள், மாணவா்களின் வாசித்தல், எழுதுதல், அடிப்படை எண்ணறிவு திறன்கள் குறித்து அவா் ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வுகளின் போது தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் பிரேமா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆா். செல்லப்பாண்டியன், சங்கா் கைலாசம், உதவி செயற்பொறியாளா்கள் சங்கரசரவணன், அசோகன், மேலூா் வட்டாட்சியா் செந்தாமரை, மாவட்டக் கல்வி அலுவலா் இந்திரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.